வணிகம்

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - சரியான நடவடிக்கையா..?

webteam

வங்கித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக பொதுத் துறை வங்கிகள் இணைப்பு குறித்து முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் இணைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார். கனரா வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகளும் இணைக்கப்படும் என்றும், ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவையும் இணைக்கப்பட்டு ஒரே வங்கியாக மாற்றப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார். சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கியுடன் இணைக்கப்பட உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறிய போது, “பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. காங்கிரஸ் கட்சி இதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. காங்கிரஸ் இந்த யோசனையை வலியுறுத்திய போது, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக அதனை எதிர்த்தது. இதனை ஒரு பெரிய சீர்திருத்த நடவடிக்கையாக நிதியமைச்சர் பேசுவது சரியல்ல. மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் போது அமைக்கப்பட்ட நாயக் கமிட்டியின் பரிந்துரைகளை இப்போது பாஜக அரசு ஒத்துக்கொண்டு நடைமுறைப்படுத்துகிறது. இருப்பினும், இது மிகவும் தாமதமான நடவடிக்கை. பொருளாதார மந்தநிலை பிரச்னையை திசைதிருப்பவே இப்போது இதனை பாஜக அரசு அறிவிக்கிறது” என்றார். 

பாஜக சார்பில் எஸ்.ஆர்.சேகர் பேசிய போது, “நிர்வாக ரீதியாக சில வங்கிகள் பலமாகவும், பலவீனமாகவும் இருக்கலாம். அப்படியிருக்கையில், இதேபோன்று வங்கிகளை இணைக்கும் போது அது சமநிலையை எட்ட வாய்ப்பு ஏற்படும். நிர்வாக ரீதியான காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் வேலையிழப்பு எதுவும் ஏற்படாது” என்று கூறினார்.

பொதுத்துறை வங்கிகளின் இணைப்புக்கு தொழிற்சங்க அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொது செயலாளர் வெங்கடாசலம் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதேபோல், கருப்பு அட்டை அணிந்து அந்தந்த வங்கிகள் முன்பு ஊழியர்கள் போரட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாளை மாலை அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.