மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனங்களின் பயன்பாட்டினை அதிகரிக்க நாடு முழுவதும் 22 மாநிலங்களில் 3000 ஹெட்டேர் பரப்பளவில் மின்சார வாகனங்களுக்கான ரீசார்ஜ் மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. இது குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை மனதில்கொண்டு இந்தியாவில் பேட்டரிகளில் இயங்கக்கூடிய மின்சார வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்க மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக பேட்டரி கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவது, அரசு பயன்பாட்டிற்கு இத்தகைய வாகனங்களை பயன்படுத்துவது, டாக்ஸிகள் போன்றவை பேக்டரி வாகனங்களில செயல்படுத்தப்படும்பொழுது அதற்கான மானியங்களை வழங்குவது போன்ற பல்வேறு விஷயங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அடுத்த 10 ஆண்டிற்குள் தற்பொழுது இந்தியாவில் உள்ள மொத்த வணிக நோக்கத்திற்காக கார்களில் 70 சதவிகிதத்தையும் தனியார் கார்களில் 30 சதவிகிதத்தையும் பேருந்துகளில் 40 சதவிகிதத்தையும் இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் 80 சதவீதத்தையும் பேட்டரிகளில் இயங்கும் மின்சார வாகனங்கள் ஆக மாற்ற மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றால், அடுத்த 5 ஆண்டுக்குள் 20 லட்சம் மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனங்கள் இந்திய சாலைகளுக்கு வந்திருக்க வேண்டும். மேலும், 4 லட்சம் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்காக இந்தியாவில் உள்ள 22 மாநிலங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் மிகப்பெரிய மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் மையங்களை அதிக எண்ணிக்கையில் நிறுவ மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக 22 மாநிலங்களில் 3000 ஹெக்டேர் பரப்பளவில் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் மையங்களை அமைக்க இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தனியார் துறையின் பங்களிப்புடன் மிக பிரமாண்டமான முறையில் இந்தத் திட்டத்தினை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டங்களை வகுத்துள்ளது.
இதற்காக முதல்கட்டமாக நாட்டின் மிகவும் பிரபலமான டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் 94 இடங்களை இந்த ஆணையம் கண்டறிந்துள்ளது. இவை தவிர மற்ற நெடுஞ்சாலைகளில் 180 இடங்களையும் புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலைகளில் சுமார் 376 இடங்களையும் இந்த பேட்டரி கார் ரீசார்ஜ் மையங்களை அமைக்க மிகத் தீவிரமான ஆலோசனைகள நடைபெற்று வருகிறது.
மொத்தமாக 650 இடங்களை கண்டறிந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், இதில் 138 இடங்களில் முதல் கட்டமாக பேட்டரி ரீசார்ஜ் மையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் விரைவில் இறுதி செய்யப்பட்டு பணிகள் மிக துரிதமாக மேற்கொள்ளப்படும் எனவும் தேசிய நெடுஞ்சாலை துறையின் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இடங்களின் அளவைப் பொருத்து இந்த சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையும் அமையும்.
இந்தத் திட்டங்கள் வெறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மட்டும் முன்னெடுக்கப்பட கூடிய திட்டங்களாக இருக்கின்றது. இவை தவிர மாநில அரசுகளும் இந்த மின்சார வாகனங்களுக்கான ரீசார்ஜ் மையங்களை அமைக்க முயற்சிகளிலும் தனியாக ஈடுபட்டிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு செய்தியாளரிடம் பேசிய குஜராத் மாநில முதல்வர் தங்கள் மாநிலத்தில் 250க்கும் அதிகமான இந்த ரீசார்ஜ் மையங்கள் அமைக்கப்படும் என்றும், இதற்காக கூடிய மொத்த செலவில் 25 சதவிகிதத்தை மாநில அரசு மானியமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த விருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இப்படி பல்வேறு மாநிலங்களும் இதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர்.
இவை தவிர தனியார் நிறுவனங்கள் தனிப்பட்ட முறையிலும் பெட்ரோல் பங்குகள் போல இந்த மின்சார வாகனங்கள் ரீசார்ஜ் மையங்களை அமைப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர். எனவே, அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் பல பகுதிகளிலும் இந்த மின்சார வாகனங்கள் ரீசார்ஜ் மையங்களை நம்மால் காண இயலும்.
- நிரஞ்சன் குமார்