வணிகம்

அடுத்து எலக்ட்ரிக் காருக்கான தொழிற்சாலை! ஓலா நிறுவனத்தின் புதிய திட்டம்!

ச. முத்துகிருஷ்ணன்

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பேட்டரி வெடிப்பு, தீ விபத்து சர்ச்சைகள் கடுமையாக எழுந்த நிலையில், கடந்த வாரம் ஓட்டிச் செல்லும்போதே ஓலா பைக் முன்சக்கரங்கள் தனியே கழண்டு சென்று விடுவதாக பயனர்கள் புகார் மழை பொழிந்தனர். இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் எலக்ட்ரிக் காருக்கான தொழிற்சாலையை தயார்படுத்த ஓலா திட்டமிட்டுள்ளது.

ஓலா தனது எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய பிறகு, அதன் எலக்ட்ரிக் கார் திட்டத்தில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது. தொழிற்சாலையை அமைப்பதற்கான நிலத்தை தீவிரமாக தேடும் முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது. உத்தரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 10,000 கோடி மதிப்பிலான திட்டத்திற்காக 1,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஓலா தனது மின்சார ஸ்கூட்டருக்கான 10 மில்லியன் யூனிட் தொழிற்சாலையை தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்குள் அமைத்த பிறகு, தற்போது எலக்ட்ரிக் கார் பக்கம் தன் பார்வையை திருப்பியுள்ளது. ஓலா தனது மின்சார கார் தொழிற்சாலையை இன்னும் ஒரு வருடத்திற்குள் வேகமாக உருவாக்க விரும்புகிறது. ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் நிறுவனம் தனது முதல் மின்சார காரை 2023 க்குள் இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அடிக்கடி கூறி வருகிறார்.

"ஓலா நிறுவனத்தில் 6-8 மாதங்களாக கார் தொடர்பான ஆர்&டி செயல்முறை நடந்து வருகிறது. இன்னும் இரண்டு வருடங்களில் நாங்கள் அதற்குத் தயாராகிவிடுவோம். இந்தியாவில் 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள பிரிவு முற்றிலும் பொருத்தமானது. நாங்களும் அந்த பிரிவில் காரை அறிமுகம் செய்ய பணியாற்றி வருகிறோம்" என்று சிஇஓ பவிஷ் அகர்வால் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பேட்டரி வெடிப்பு, தீ விபத்து சர்ச்சைகள் கடுமையாக எழுந்த நிலையில், கடந்த வாரம் ஓட்டிச் செல்லும்போதே ஓலா பைக் முன்சக்கரங்கள் தனியே கழண்டு சென்று விடுவதாக ஓலா பயனர்கள் புகார் மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.