வணிகம்

இந்தியாவில் 2020-ல் விவசாயிகளைவிட தொழில் - வர்த்தகர்கள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை

இந்தியாவில் 2020-ல் விவசாயிகளைவிட தொழில் - வர்த்தகர்கள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை

2020-ஆம் ஆண்டு விவசாயிகளை விட அதிக எண்ணிக்கையில் தொழில்முனைவோர்களும், தொழிலதிபர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரங்கள்படி, கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட தொழில்முனைவோர்கள் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளதாகவும், வர்த்தக துறையில் ஈடுபடுவோரில் 2019-ஆம் ஆண்டும் 2906 பேர் தற்கொலை செய்துகொண்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டு 4356 ஆக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிகையை விட அதிகம்.

ஒட்டுமொத்தமாக தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் என்று அனைத்து பிரிவும் சேர்த்து பார்த்தால் 2020-ஆம் ஆண்டு 11,716 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதே ஆண்டு விவசாயிகள் 10,677 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பொதுவாக, தொழில்முனைவோர் தற்கொலை விகிதம் மிகக் குறைவாகவே இருக்கும் என்றபோதும், கொரோனா பேரிடரால் ஏற்பட்ட தொழில் நஷ்டங்கள், ஊரடங்கு பாதிப்பு முதலானவை இந்தத் தரப்பினரின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக பார்க்கப்படுகிறது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)