வணிகம்

மும்பை: அரசு அனுமதி கொடுத்தும் மால்களை திறக்காத நிர்வாகிகள் - காரணம் இதுதான்!

நிவேதா ஜெகராஜா

ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் மும்பையில் மால்கள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து மால்கள் செயல்படத் தொடங்கின. ஆனால், இரு நாள்களுக்குள் மீண்டும் மூடப்பட்டது.

மகாராஷ்டிர அரசிடம் இருந்து ஆகஸ்ட் 16-ம் தேதி அறிக்கை ஒன்று வந்தது. அதில், மால்களில் வேலை செய்யும் மேலாளர்கள் முதல் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இரு டோஸ் தடுப்பூசிகளும் எடுத்துக்கொண்டு 14 நாட்களுக்கு பிறகே மால்களில் வேலை செய்ய முடியும் என உத்தரவிட்டது.

"பணியாளர்களுக்கு ஒரு டோஸ் மட்டுமே போதும் என நினைத்து மால்களை திறந்தோம்; ஆனால், அரசாங்கம் இரு டோஸ் எடுத்துக்கொண்டு 14 நாள்களுக்கு பிறகே மால்கள் செயல்பாட்டினை தொடங்க முடியும் என தெளிவான விதிமுறையை உருவாக்கி இருப்பதால் எங்களால் திறக்க முடியாது" என மால்களின் நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர்.

"இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட பணியாளர்களின் எண்ணிகை மிகவும் குறைவு. குறைவான பணியாளர்களை வைத்துக்கொண்டு மால்களை திறக்க முடியாது" என்று அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும், "கோவிஷீல்டு இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்கு 84 நாள் அவகாசம் இருப்பதால் பெரும்பாலானவர்களுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அதற்கு பிறகு 14 நாள்கள் காத்திருக்க வேண்டும் என்பதால் செப்டம்பர் இறுதி வரையில் மால்கள் திறப்பதற்கான சாத்தியம் குறைவு" என்று தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், ஒரு டோஸ் போட்டிருந்தால் போதும் என்னும் விதிமுறைக்கு மாற்ற வேண்டும் என ரீடெய்ல் துறையினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.