வணிகம்

"லாக்டவுன் நடைமுறையால் மிகப் பெரிய பேரழிவு" - ராகுல் பஜாஜ் எச்சரிக்கை

"லாக்டவுன் நடைமுறையால் மிகப் பெரிய பேரழிவு" - ராகுல் பஜாஜ் எச்சரிக்கை

நிவேதா ஜெகராஜா

"கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் கொண்டுவரப்படுகிறது. ஆனால், லாக்டவுன் கொரோனா பரவலை தடுக்கிறதோ இல்லையோ பொருளாதார மேம்பாட்டை தடுக்கிறது. லாக்டவுனால், பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, ஊரடங்கு நேரத்தில் தொழில்கள் பாதிப்படைவது, வேலை இழப்புகள் அதிகமாவது, அதனால் ஏற்படும் பிற பாதிப்புகள் ஆகியவை, பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது" என பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ராகுல் பஜாஜ் தெரிவித்திருக்கிறார்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவராக ராகுல் பஜாஜ், பங்குதாரர்களுடன் உரையாடுவது இதுவே கடைசியாகும். நிறுவனத்தின் அடுத்தகட்ட தலைமை குறித்து சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. நீரஜ் பஜாஜ் அடுத்த தலைவராக செயல்படுவார். ராஜீவ் பஜாஜ் நிர்வாக இயக்குநராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

"கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஆறு வாரங்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால், உற்பத்தி மட்டுமல்லாமல் விற்பனையும் பாதிக்கப்பட்டது. லாக்டவுன் தளர்த்தப்பட்டாலும் கூட 2020-ம் ஆண்டு விழாக் காலத்தில்தான் தேவை உயர்ந்தது.

இந்த ஆண்டு இரண்டாம் அலை வேகம் எடுத்ததை அடுத்து, மார்ச் மாதம் முதல் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் லாக்டவுனை அறிவித்தன. ஏப்ரல் மற்றும் மே மாதத்தை முழுவதும் இழந்துவிட்டோம். ஜூன் மாதத்தின் பாதியில்தான் ஓரளவுக்கு விற்பனை இருந்தது.

லாக்டவுன் போதுமான பலனை தரவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அரசுகள் லாக்டவுனை அறிவிக்கின்றன. இதனால் நிச்சமற்றத்தன்மை உருவாகி இருக்கிறது. நடுத்தர மற்றும் ஏழைகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நகரங்களில் இருந்து மீண்டும் கிராமங்களை நோக்கி செல்பவர்களின் எண்ணிக்கை உயர்கிறது. இது மிகப் பெரிய பேரழிவாக மாறும்.

விதிமுறைகளை கடுமையாக்குவதுதான் இதற்கு தீர்வு. முகக்கவசம், தனிமனித இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துவதை கட்டாயமாக்கவேண்டும். மேலும், தடுப்பூசியை வேகப்படுத்த வேண்டும். அப்போதுதான் ஏழைகளுக்கு உணவு கிடைக்கும். நாடும் வளர்ச்சி அடைய முடியும்" என்றார் ராகுல் பஜாஜ்.