தமிழ்நாட்டிற்கு வட்டியில்லா கடனாக ரூ.3,500 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாக மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு ரூ. 3,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். அதில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், “மதுரையில் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்ட நைப்பர் எனப்படும் தேசிய மருந்தாக்க கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதற்கு பதில் நைமர் எனப்படும் தேசிய மலேரியா ஆராய்ச்சி மையத்தை தொடங்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது” எனக் கூறினார்.