மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் “குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட்” விசாரணையில் உள்ளது என்ற செய்தியால் அச்சத்தில் உள்ளனர். ஏனெனில் ஃபண்ட் ஹவுஸுடன் தொடர்புடைய யாரோ Front Running எனப்படும் வர்த்தக முறைகளை மேற்கொண்டதாக செபி கவனித்துள்ளது. இந்தச் செய்தியை உறுதிசெய்து விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதியளிக்கும் சார்பு வடிவ (Proforma statement) அறிக்கையை Quant AMC வெளியிட்டுள்ளது. என்ன நடந்தது என்பது பற்றிய முழுமையான தகவல் இப்போது வரை வரவில்லை.
ஒரு மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர் அல்லது வர்த்தகர் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆர்டர்களைச் செயல்படுத்தும் முன், தங்கள் சொந்த கணக்கில் இருந்து அந்த குறிப்பிட்ட பங்கின் மீது வணிகம் செய்வது “Front Running” எனப்படும். இது அந்த மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர் அல்லது வர்த்தகருக்கு நியாயமற்ற நன்மையை அளிக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஒரு பங்கை வாங்கவோ/விற்கவோ செய்யும் போது அது பங்கு விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதை அறிந்த மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர் அதற்க்கு ஒரு நாள்/சில நாட்கள் முன்னதாகவே தங்கள் சொந்த அக்கௌன்ட்டிலோ அல்லது நண்பர்கள் அல்லது உறவினர் அக்கௌன்ட் மூலமாக வர்த்தகம் செய்து நியாயமற்ற லாபம் ஈட்டுகிறார்.
உதாரணமாக, மியூச்சுவல் ஃபண்டில் பணிபுரியும் ஒருவர், அந்த ஃபண்ட் ரூ.20,000 கோடி சந்தை மூலதனம் உள்ள ஒரு நிறுவனத்தில் ரூ. 100 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கத் தயாராக உள்ளது என்பதை அறிந்த பிறகு, அந்த நிறுவனத்தின் பங்குகளில் ரூ.1 கோடி முதலீடு செய்கிறார். இப்போது மியூச்சுவல் ஃபண்ட் வாங்கிய செய்தி பொதுவெளியில் வந்து பங்கு விலை 2% உயர்வதாக கொள்வோம், அந்த நபர் இதன் மூலம் ரூ.2 லட்சம் லாபம் பெறுவார்.
செபி இதை கண்டுபிடிக்க பல வழிகளை உபயோகிக்கறது. இப்போது வர்த்தகம் பெரும்பாலும் எலக்ட்ரானிக் முறையில் மேற்கொள்ளப்படுவதால் இதை கண்டுபிடிப்பது சுலபமாகிறது. செபி ஃபண்ட் மேனேஜர்களின் தொலைபேசி, ஈமெயில் & வாட்ஸாப் நடவடிக்கைகளை கண்காணிக்கிறது. AMFI யும் செபியும் வருங்காலத்தில் இன்னும் உறுதியான நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
இது போன்ற சூழ்நிலைகள் இதற்கு முன்னரும் ஏற்பட்டுள்ளன.
ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்: Front running வழக்கில் (மே 2021) 3 நபர்களை 6 மாதங்களுக்கு செபி தடை செய்கிறது
ஐஐஎஃப்எல் ஏஎம்சி, Front running வழக்கில் செபியிடம் சிக்கிய ஊழியரின் சேவையை இடைநிறுத்துகிறது (அக் 2020)
HDFC AMC Front running வழக்கு: 2 நிறுவனங்களுடனான வழக்கை செபி தீர்த்து வைத்தது (செப் 2019)
Deutsche மியூச்சுவல் ஃபண்டின் நிதி மேலாளரும் அவரது பெற்றோரும், மியூச்சுவல் ஃபண்ட் வர்த்தகத்தில் (டிசம்பர் 2021) Front running செய்ததாக கூறப்படும் வழக்கை செபியிடம் தீர்த்துக் கொள்ள கிட்டத்தட்ட ₹ 5 கோடிகளைச் செலுத்தினர்.
மே 2022: ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் Front Running.
இந்த செய்தியால், AMC இன் திட்டங்களில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு என்னாகுமோ என்று கவலைப்பட ஆரம்பித்து உள்ளனர். குவாண்ட் ஒரு வேகமாக வளரும் நிதி நிறுவனமாகும். ஆறு ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில், இது ரூ.84,000 கோடி சொத்துத் தளமாக வளர்ந்துள்ளது. மேலும், அதன் ஃபண்ட்கள் நல்ல செயல்திறன் கொண்டவை. இந்நிலையில், இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைக்கு என்ன நிலவரம் என்பதை SEBI இன்னும் உறுதியாக சொல்லவில்லை. விஷயம் விசாரணையில் உள்ளது. SEBI தனக்கு கிடைக்கும் தகவல்கள் அதிக அளவு உறுதியுடன் இருக்கும்போது மட்டுமே பொதுவெளியில் முழுமையாக தெரிவிக்கும் என எதிர்பார்க்கலாம். PANIC SELLING தேவையில்லை. அதே சமயம், Quant நிறுவனம் முதலீடு செய்திருக்கும் பங்குகள் பெரும்பாலும் fundamentally strongஆன நிறுவனங்கள் என்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அடுத்தடுத்த நிகழ்வுகளை வைத்து, தங்களின் நிதி ஆலோசகரிடம் கருத்து கேட்டுவிட்டு, சரியான முடிவை எடுக்கவும்.