Systematic Investment Plan Savings
மார்க்கெட்

மார்கெட் ஏற்ற இறக்கங்களுக்கு SIPஐ நிறுத்த வேண்டுமா..?

உங்கள் எஸ்.ஐ.பி. முதலீட்டுத் திட்டம் மற்ற எஸ்.ஐ.பி திட்டங்களைவிட சமீப காலங்களில் மோசமான செயல்திறன் கொண்டிருந்தால், நிதி ஆலோசகர் வழிகாட்டலின்படி அதே வகையிலான புதிய திட்டத்திற்கு மாறலாம்.

மார்க் ஹௌஸி

நடுத்தர வர்க்க மக்களின் மிக விருப்பமான முதலீட்டு முறையாக இருப்பது எஸ்.ஐ.பி (Systematic Investment Plan) எனப்படும் சீரான முதலீட்டு முறை தான். இம்முறையின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களில் மாதத்திற்கு ஒருமுறை அல்லது காலாண்டுக்கு ஒருமுறை முதலீடு செய்யமுடியும். குறைந்தபட்சமாக மாதத்திற்கு ஒருமுறை ரூ.100 கூட மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யலாம் என்பது இத்திட்டத்தின் கவர்ச்சிகரமான வாய்ப்பு. பெரும் தொகையாக முதலீடு செய்யமுடியாத நடுத்தர வர்க்க மக்களுக்கு எஸ்.ஐ.பி ஒரு வரப்பிரசாதம்.

ELSS (Equity Linked Savings Schemes) எனப்படும் எஸ்.ஐ.பி திட்டங்களில் முதலீடு செய்யும்போது வரிச்சலுகையும் பெறலாம். கூட்டுவட்டியின் மகத்துவத்தால் அதிக ரிட்டர்ன்ஸ் கிடைப்பதோடு, வரிச்சலுகையும் கிடைப்பதால் சம்பளதாரர்கள் பலரின் விருப்பமான தேர்வாக ELSS இருக்கிறது.

முதலீடு செய்வதை நிறுத்துவது தவறு!

"நாம் மற்றவர்களை விட புத்திசாலியாக இருக்க வேண்டியதில்லை. மற்றவர்களை விட நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும்" என்ற வாரன் பபெட் பொன்மொழி எஸ்.ஐ.பி முதலீட்டு முறைக்கு மிகச்சரியாகப் பொருந்தும். எஸ்.ஐ.பி பற்றிய போதிய புரிதல் இல்லாமல், நிறைய கட்டுக்கதைகளை நம்பி இந்த முதலீட்டுமுறையில் தவறு செய்து வருவாய் இழப்பைச் சந்திப்பவர்கள் ஏராளம். அந்தக் கட்டுக்கதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று, `பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும்போது எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதை குறைத்துக்கொள்ளலாம் அல்லது நிறுத்திக்கொள்ளலாம்' என்பது. இது மிகத்தவறான அணுகுமுறையாகும். இதே போன்று பங்குச்சந்தை இறக்கத்தின் போதும் எஸ்.ஐ.பி முறை மூலம் முதலீடு செய்வதை நிறுத்துவது தவறான அணுகுமுறையாகும்.

ஒருவர் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ்.ஐ.பி எனப்படும் சீரான முதலீட்டு முறையின் கீழ் நீண்டகால அடிப்படையில் தொடர்ந்து முதலீடு செய்துவரும்போது கூடுதல் லாபம் பெறமுடியும். ஒரு குறிப்பிட்ட தொகையை எஸ்.ஐ.பி முறையில் நீங்கள் முதலீடு செய்துவருவீர்கள். நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு மியூச்சுவல் ஃபண்ட்டின் நிகர சொத்து மதிப்பின் (Net Asset Value) அடிப்படையில் யூனிட்கள் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். பங்குகளின் விலை அடிப்படையில் நிகர சொத்து மதிப்பும் மாறுபடும். எனவே, ஒருவர் செய்யும் முதலீட்டிற்கு பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது குறைவான யூனிட்களும், பங்குச்சந்தை இறக்கத்தில் இருக்கும்போது அதிகமான யூனிட்களும் கிடைக்கும்.

இதை ஒரு உதாரணம் மூலம் காணலாம். ஒருவர் ரூ.1,000 பணத்தை எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்வதாக எடுத்துக்கொள்ளலாம். பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது, நிகர சொத்து மதிப்பு ரூ.100 என எடுத்துக்கொண்டால், அவருக்கு 10 யூனிட்கள் கிடைக்கும். இதுவே, பங்குச்சந்தை வீழ்ச்சியின்போது நிகர சொத்துமதிப்பு ரூ.50 என்று இருக்கிறதென்றால், அவருக்கு 20 யூனிட்கள் கிடைக்கும்.

ஏன் தவறு தெரியுமா?

பங்குச்சந்தை ஏற்றத்தின் போது குறைந்த யூனிட்கள் தான் கிடைக்கும் என்பதால் எஸ்.ஐ.பி முறையை தற்காலிகமாக நிறுத்திவைப்பது தவறான முடிவாகும். ஏனென்றால், எஸ்.ஐ.பியின் சிறப்பம்சமே, Rupee Cost Averaging எனப்படும் ரூபாய் செலவு சராசரி தான். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாது, நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து முதலீடு செய்துவரும்போது, உங்கள் முதலீடு ஆவரேஜ் செய்யப்பட்டுவிடும். மேலே கண்ட உதாரணம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும் யூனிட்கள் மட்டுமே ஆகும். 5 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களைத் தாண்டி உங்கள் முதலீட்டிற்கு ஈடான நிகர சொத்துமதிப்பு அதிகமாகியிருக்கும். கடந்த கால வரலாறும் இதைத்தான் உறுதி செய்கிறது. பங்குச்சந்தை எப்போது ஏற்றமடையும், எப்போது இறக்கமடையும் என்பதை எவராலும் உறுதியாகச் சொல்லமுடியாது. பங்குச்சந்தை மேலும் இறக்கமடையும் அல்லது ஏற்றமடையும் எனக் காத்திருந்து பொன்னான தருணங்களைத் தவறவிட்டவர்களே அதிகம்.

சரி எப்போது எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதை நிறுத்தலாம்?

நீங்கள் இலக்குசார்ந்த முதலீட்டை மேற்கொண்டிருந்து, அது நிறைவேறும்பட்சத்தில். உதாரணத்திற்கு, ஒருவர் தன் குழந்தையின் எதிர்காலக் கல்விச்செலவு அல்லது திருமணத்திற்காக முதலீடு செய்திருந்து, குழந்தை வளர்ந்து ஆளாகி இக்காலகட்டத்தை நெருங்கும்போது!

உங்கள் எஸ்.ஐ.பி. முதலீட்டுத் திட்டம் மற்ற எஸ்.ஐ.பி திட்டங்களைவிட சமீப காலங்களில் மோசமான செயல்திறன் கொண்டிருந்தால், நிதி ஆலோசகர் வழிகாட்டலின்படி அதே வகையிலான புதிய திட்டத்திற்கு மாறலாம்.

இதுவரை சிறப்பாகச் செயல்பட்டுவந்த உங்கள் எஸ்.ஐ.பி. முதலீட்டுத் திட்டத்தின் ஃபண்ட் மேனேஜர் மாறி புதியதாக ஒரு ஃபண்ட் மேனேஜர் நியமிக்கப்படும்போது, புதிதாக வருபவரின் கடந்தகால செயல்பாடு மீது உங்களுக்கு அதிக நம்பிக்கையில்லாதபோது நிதி ஆலோசகர் வழிகாட்டலின்படி நடந்துகொள்ளலாம்.

மருத்துவ சிகிச்சை போன்ற அவசரத் தேவைக்கு நிதி தேவைப்படும்போது, வேறு வழி இல்லையென்றால்!