மியூச்சுவல் ஃபண்ட்டைப் பொறுத்தவரை எண்ணற்ற தீம்களில் நிறைய திட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமானது இண்டெக்ஸ் ஃபண்ட். சரி முதலீட்டாளர்களிடையே மிகப்பிரபலமாகத் திகழும் இந்த இண்டெக்ஸ் ஃபண்ட் என்றால் என்ன? உங்கள் கையில் நூறு ரூபாய் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்த மதிப்பிற்கு பழங்கள் வாங்க விரும்புகிறீர்கள். இன்றைய சந்தை மதிப்பில் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.145, கொய்யா ஒரு கிலோ ரூ.77, சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.60-க்குக் கிடைக்கிறது. இப்போது உங்களிடம் இருக்கும் ரூ.100-க்கு இவற்றில் ஏதாவது ஒரு பழத்தை மட்டுமே கூடக்குறைய வாங்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு பழத்தில் இருந்தும் ரூ.100-ன் மதிப்பில் கலவையாக அனைத்தும் கிடைத்தால்? அதுதான் இண்டெக்ஸ் ஃபண்ட். நிறுவனங்களின் பங்குகளைத் தனித்தனியாக வாங்குவதற்குப் பதில், ஒரு தீம் அடிப்படையில், ஒவ்வொன்றில் இருந்தும் சிறு பங்கின் உரிமையைக் கலந்து உங்களுக்கு வழங்குவதுதான் இண்டெக்ஸ் ஃபண்ட்.
இந்தியப் பொருளாதாரத்தில் அதிவேக வளர்ச்சி கொண்ட துறையாக தகவல் தொழில்நுட்பத்துறை விளங்குகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), 13 சதவிகிதத்திற்கும் மேல் தகவல் தொலில்நுட்பத்துறை பங்களிக்கிறது. 2025-ம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்துறையின் பங்களிப்பை 1 டிரில்லியன் டாலராக அல்லது 20 சதவிகிதமாக வளர்ச்சியடையச் செய்வதை நம் நாடு இலக்காகக் கொண்டுள்ளது. ஐ.டி துறையை அடிப்படையாகக் கொண்டு நிப்பான் இந்தியா நிறுவனம் நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸ் ஃபண்ட்டை (NFO) புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஃபண்டிற்கான பொதுச்சந்தா பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 16-ம் தேதி வரை முடிவடைகிறது. அலாட்மென்ட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து வணிக நாட்களுக்குள் தொடர்ச்சியான விற்பனை மற்றும் மறு வாங்குதலுக்காக இந்தத் திட்டம் மீண்டும் திறக்கப்படுகிறது.
இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டமானது நிஃப்டி ஐ.டி குறியீட்டைப் பிரதிபலிக்கும்/கண்காணிக்கும் ஒரு திறந்தநிலைக் குறியீட்டு திட்டமாகும். நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸ் சார்ந்த பங்கு, பங்கு சார்ந்த பத்திரங்கள் மற்றும் இக்கலவையைப் பிரதிபலிக்கும் போர்ட்ஃபோலியோக்களில் முதலீடு செய்வதால், நீண்ட கால மூலதன மதிப்பீட்டை உருவாக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.
முதலீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம் மற்றும் அதற்கு மேல் ரூபாய் ஒன்றின் மடங்குகளில் முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை.
இந்த ஐ.டி இண்டெக்ஸ் ஃபண்ட் திட்டத்தில் என்ட்ரி லோட் மற்றும் எக்ஸிட் லோட் இல்லை. அதாவது முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் தங்கள் வருவாயை முதலீடு செய்யவும், மீட்டுக்கொள்ள மற்றும் மாற்றவும் எதையும் செலுத்த வேண்டியதில்லை.
நிஃப்டி ஐ.டி குறியீட்டை உருவாக்கும் கருவிகளில் முதலீடு - குறைந்தபட்சம் 95 சதவிகிதத்தில் இருந்து அதிகபட்சமாக 100 சதவிகிதம் வரை!
ரொக்கம் & ரொக்கத்திற்குச் சமமானவை மற்றும் பணச் சந்தை கருவிகள், ரிவர்ஸ் ரெப்போ, ட்ரைபார்ட்டி ரெப்போ அரசுப் பத்திரங்கள் அல்லது கருவூலப் பில்கள், பணச் சந்தை / லிக்விட் திட்டங்களின் அலகுகள் - இவற்றில் அதிகபட்சமாக 5 சதவிகிதம் வரை!
நிப்பான் இந்தியா நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸ் ஃபண்ட்டின் ஃபண்ட் மேனேஜராக ஹிமான்ஷூ மாங்கே செயல்படுவார்.
திட்டத்தின் முதலீட்டு நோக்கம் அடையப்படும் என்பதற்கு எந்த உறுதியும் அல்லது உத்தரவாதமும் இல்லை என்பதாலும், திட்டத் தகவல் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி இந்தத் திட்டமானது “மிக அதிக ரிஸ்க்” கொண்டது என்பதாலும், முதலீட்டாளர்கள் தங்கள் நிதி ஆலோசகர்களின் அறிவுரைக்கேற்ப செயல்படவும்.