nikkei pt web
மார்க்கெட்

பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஜப்பானிய யென் டிரேடிங் காரணமா? இரண்டுக்கு இருக்கும் தொடர்பு என்ன?

பங்குச்சந்தைகள் நேற்று வீழ்ச்சி.. இன்று ஏற்றம்... காரணம் கேட்டால் ஜப்பானின் யென் டிரேடிங்தான் எனக் கூறுகிறார்கள்... அப்படியென்றால் என்ன.. இந்தியப் பங்குச்சந்தைகளின் ஏற்ற இறக்கங்களுக்கும் ஜப்பான் கரன்சிக்கும் என்ன தொடர்பு? இங்கு தெரிந்துகொள்ளலாம்.

PT WEB

செய்தியாளர் கௌசல்யா

அமெரிக்கா, ஐரோப்பா, மற்ற ஆசியப் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள் பெரும்பாலும் இந்தியப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்கும். சர்வதேச முதலீட்டாளர்கள் என அழைக்கப்படுபவர்கள், உலகளவில் நடக்கும் பொருளாதார நிகழ்வுகள், அரசியல் சூழல், போர்ப் பதற்றங்கள் இவைகளை கருத்தில் கொண்டே அதற்கு தகுந்தாற்போல முதலீடு செய்வர்.

எந்த நாட்டில் குறைந்த வட்டியில் பணம் கிடைக்கிறதோ அதைப் பெற்று அதிக லாபம் கிடைக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதும் வழக்கம். ஜப்பானின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் ஜப்பான் சுமார் 30 ஆண்டுகளாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை பூஜ்ஜியம் சதவிகிதம் முதல் 0.10 சதவிகிதம் என்ற மிகக்குறைந்த அளவிலேயே நிர்ணயித்து வந்துள்ளது.

ஆனால், கடந்த ஜூலை 31ஆம் தேதி ஜப்பான் கடன்களுக்கான வட்டி விகிதத்தை கால் சதவிகிதமாக உயர்த்தியது. இதனால் அந்நாட்டில் பங்குச்சந்தையான NIKKEI 14 சதவிகிதம் சரிந்தது. இதுவும் இந்தியப் பங்குச்சந்தைகள் சரிய காரணமாகக் கூறப்பட்டது. தற்போது இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆகியுள்ள யென் கரன்சி டிரேடிங்கிற்கும் இந்திய பங்குச்சந்தைகளுக்கும் என்ன தொடர்பு? என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர்.

பங்குச்சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் கூறுகையில், “ஜப்பானில் யென் (ஜப்பானிய பணமதிப்பு) வாங்கிவிட்டு, அதை இந்திய ரூபாயாக மாற்றுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இந்திய ரூபாயில் profit book செய்துவிட்டு மீண்டும் ஜப்பானிய யென்னிற்கு மாற்றுகிறீர்கள். அப்போது ஜப்பானிய யென்னிற்கு மதிப்பு (Appreciation) அதிகமாகும். அவர்கள் வட்டி கேட்கவில்லை என்றாலும், இந்த கரன்சி Appreciation-ஆல் உங்களுக்கு பெருமளவு நஷ்டமாகக்கூடிய வாய்ப்பு உள்ளது” என தெரிவித்தார்.

இதுஒருபுறம் என்றால், இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் கணிசமாக உயர்வு கண்டன. இதற்கு இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதே காரணமாக கூறப்பட்டது. வர்த்தகத் தொடக்கத்தில் ஆயிரம் புள்ளிகள் வரை ஏற்றம் கண்ட சென்செக்ஸ் தற்போது சிறிய இறக்கத்துடன் முடிவடைந்திருக்கின்றன. வர்த்தக நிறைவில் சென்செக்ஸ் 166 புள்ளிகளும், நிஃப்டி 63 புள்ளிகளும் குறைந்தன. நேற்றைய சரிவில் பங்குகளின் விலை குறைந்ததால், அவைகளை வாங்கிய வர்த்தகர்கள், பின் இன்றே லாபத்தை பதிவு செய்தனரா?.

ஒரே நாளில் ஜப்பான் நாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தைகளில் செய்த முதலீட்டை திரும்பப்பெற்றனரா? இதுபோன்ற பல கேள்விகள் எழத்தான் செய்கின்றன. எனவே, பங்குச்சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்படும்போது, நிதானமாக ஆராய்ந்து முதலீடு செய்வதை கவனித்தில் கொள்ள வேண்டும்.