ipo pt web
மார்க்கெட்

IPO முதலீடு: இருக்கும் ஆபத்துகள்... முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டியதும், செய்ய வேண்டியதும் என்ன?

தொழிலை விரிவுபடுத்த, ஆராய்ச்சிக்கு செலவழிக்க, கடனை அடைக்க, மார்க்கெட்டிங் செலவு செய்ய என பல காரணங்கள் இருக்கலாம், அவற்றை பற்றிய புரிதலோடு நியாமான காரணங்கள் இருந்தால் முதலீடு செய்யலாம்.

த. பிரபாகரன்

பஜாஜ் ஹௌசிங் பைனான்ஸ் IPO 63 மடங்கு விண்ணப்பத்தை பெற்று நேற்று முடிவடைந்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 3.2 லட்சம் கோடி மதிப்புள்ள விண்ணப்பத்தை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் Coal India நிறுவனத்திற்கு ரூ 2.3 லட்சம் கோடி மதிப்புள்ள விண்ணப்பங்கள் வந்ததே இந்தியாவில் அதிகபட்ச சாதனையாகும்.

செபி சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, IPO-வில் முதலீடு செய்யும் 50% முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை பட்டியலிடப்பட்ட ஒரு வாரத்திற்குள் விற்று விடுவதாகவும், 70% முதலீட்ட்டாளர்கள் ஓர் ஆண்டுக்குள் பங்குகளை விற்று விடுவதாகவும் தெரியவந்துள்ளது.

விரைவில் விற்க காரணம் என்ன ?

வல்லுநர்கள் சிறுமுதலீட்டாளர்களின் இந்த போக்கிற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக பட்டியலிடுகின்றனர். பெரும்பாலான முதலீட்டாளர்கள் IPO வரும் நிறுவனங்களை பற்றி படிப்பது இல்லை. முன்னர்போல் இல்லாமல் தற்காலங்களில் வரும் பெரும்பாலான IPO-க்கள் விலை சிறிது அதிகம் வைத்தே சந்தைக்கு வருகின்றன. பட்டியலிடப்பட்டவுடன் அவை இன்னும் அதிக மதிப்பை அடைவதால், முதலீட்டாளர்கள் லாபநோக்கில் உடனடியாக விற்கின்றனர்.

சந்தை காளையின் பிடியில் இருப்பதால் நிறைய நிறுவனங்கள் நிதியை திரட்ட சந்தைக்கு வருகின்றன. சுமாரான நிறுவனம் கூட நல்ல அளவு விண்ணப்பங்களை பெற்று அதிக மதிப்பில் பட்டியலிடப்படுகிறது. இப்போது விண்ணப்பித்து பட்டியலிடப்படும் காலத்தை தொழில்நுட்ப உதவியுடன் குறைத்து உள்ளதால், முதலீட்டாளர்கள் ஒரு பங்கில் பார்த்த லாபத்தை பதிவு செய்து அடுத்த பங்கை நோக்கி ஓடுகின்றனர்.

ஆபத்துக்கள் என்ன ?

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை விட புதிதாக சந்தைக்கு வரும் நிறுவங்களின் ஆபத்து அதிகம். ஏற்கனவே பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் அந்த நிறுவனங்களை பற்றிய நிறுவன மேலாண்மை, ஆளுகை & நீண்டகால நிதிநிலைமை பற்றிய தகவல்கள் கிடைக்கும், புதிய நிறுவனங்களில் இவை குறைவாகவே கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் அதிக ப்ரீமியத்தில் பட்டியலிடப்படும் என நினைப்பது தவறாகும். சந்தையின் மனநிலை திடீரென மாறலாம், அப்போது IPO முதலீடு நஷ்டத்தை கூட சந்திக்கலாம். குறுகிய காலத்தில் விற்பதால் லாபத்தில் 20% (STCG) வரி கட்ட வேண்டும்.

முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டியது என்ன ?

நண்பர்கள் சொன்னார்கள் என்று ஆராயாமல் முதலீடு செய்ய கூடாது.

ஏறும் சந்தையில், அதிக வரவேற்பை பெரும் IPO பற்றிய செய்திகளால் influence ஆவதை தவிர்க்கவும்.

இன்னும் லாபமே பார்க்காத நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

நல்ல நிறுவனத்தின் மதிப்பு பற்றிய புரிதல் இல்லையென்றால், IPO மட்டுமே வாய்ப்பாக கருதாமல் பட்டியலிடப்பட்டு சிறிது காலம் கழித்து நிறுவன மதிப்பு சிறிது இறங்கியவுடன் வாங்கலாம்.

முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன ?

நிறுவனம் தாக்கல் செய்துள்ள DRHP எனப்படும் ஆவணங்களை நன்றாக ஆராய்ந்து படிக்க வேண்டும்.

நிறுவனத்தின் போட்டியாளர்கள் யார் என்பதை அறிந்து அந்த நிறுவனங்களின் மதிப்போடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

நிறுவனம் எதற்காக நிதி திரட்டுகிறது என்பதை பற்றிய புரிதல் வேண்டும்.

தொழிலை விரிவுபடுத்த, ஆராய்ச்சிக்கு செலவழிக்க, கடனை அடைக்க, மார்க்கெட்டிங் செலவு செய்ய என பல காரணங்கள் இருக்கலாம், அவற்றை பற்றிய புரிதலோடு நியாமான காரணங்கள் இருந்தால் முதலீடு செய்யலாம்.

நல்ல மதிப்பிற்கு காத்திருங்கள்:

பட்டியலிடப்பட்ட 3 மாதத்தில் இருந்து ஓர் ஆண்டுக்குள் நிறுவனம் பற்றிய உண்மைகள் வெளியே வரும். துவக்கத்தில் இருந்த வரவேற்பு குறைந்து, நல்ல தரமான பங்குகள் கூட பட்டியலிடப்பட்ட 6-12 மாதங்களில் குறைவான விலைக்கு வரலாம். அவை நீண்டகால நோக்கில் வாங்க சிறந்த விலையாக கூட இருக்கலாம். IPO முதலீட்டை சூதாட்டம் போல் கருதாமல் குறைந்தது நல்ல நிறுவனத்தில் குறைந்தது 3 ஆண்டுகால முதலீடு என்ற பார்வையில், ஆராய்ந்து முதலீட்டு முடிவுகளை எடுப்பது நல்லது.