உலக பங்குசந்தைகளில் மீண்டும் அனல் வீசத்துவங்கியுள்ளது. அமெரிக்காவில் "பொருளாதார மந்தநிலை" (Recession) வரலாம் என்ற அச்சத்தில் ஜப்பான் பங்குச்சந்தை துவங்கி அமெரிக்கா பங்குச்சந்தை வரை 2020ம் ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன.
புதனன்று ஜப்பான் மத்திய வங்கி, வட்டி விகிதத்தை சிறிது உயர்த்துவதாக அறிவித்தது. இதனால் Yen வலுவடைந்து ஜப்பான் பங்குச்சந்தை வியாழன் அன்று வீழ்ச்சியடைந்தது. கடந்த 3 வாரங்களில் மட்டும் டாலருக்கு நிகரான Yen மதிப்பு 8% வரை உயர்ந்து உள்ளது. வியாழனன்று வந்த மோசமான அமெரிக்க பொருளாதார தரவுகள் விளைவாக Yen மேலும் வலுவடைந்து, வெள்ளியன்று காலை ஜப்பான் பங்குச்சந்தை 6% வரை வீழ்ந்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் 9% வரை ஜப்பான் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளளது.
அமெரிக்க Fed வங்கியின் கூட்டம் கடந்த 30-31ம் தேதிகளில் நடந்து முடிந்தது. அப்போது பேசிய Fed சேர்மன் Powell, இந்தமுறை வட்டிக்குறைப்பு இல்லை எனவும், வரும் நாட்களில் விலைவாசி உயர்வை பொறுத்து செப்டம்பர் மாத கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என அறிவித்தார். சந்தையில் பெரும்பாலானோர், அமெரிக்க பொருளாதார நிலைமை சரியில்லை எனவும், Fed வட்டிக்குறைப்பில் மெதுவாக செயல்படுவதாகவும் கருதுகின்றனர்.
மோசமான அமெரிக்க பொருளாதார தரவுகள் & காலாண்டு முடிவுகள்: வியாழன் அன்று வந்த ஜூன் மாதத்திற்கான உற்பத்தித்துறை வளர்ச்சி குறியீடு தொடர்ந்து 2வது மாதமாக குறையவும், அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ந்தது.
அன்று சந்தை முடிந்தவுடன் வந்த Amazon, Intel & Snapchat போன்றவற்றின் காலாண்டு முடிவுகள் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. Intel நிறுவனம் டிவிடெண்ட்டை நிறுத்தி வைப்பதாகவும், 15% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போவதாக அறிவித்தது. மேலும் சில முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்பை சமீபநாட்களில் அறிவித்து உள்ளன.
வெள்ளியன்று வந்த வேலைவாய்ப்பின்மை குறியீடு 2021க்கு பிறகு அதிகரித்து 4.3% கடந்து பதிவானது. இது அத்தனையும் சேர்த்து வெள்ளியன்று அமெரிக்க பங்குசந்தையில் எதிரொலித்தது. அன்று Dow Jones, Nasdaq & Russell 2000 குறியீடுகள் முறையே 1.5%, 2.4% & 3.5% வரை வீழ்ச்சியடைந்தன. அமேசான் நிறுவனம் 11% வரையும் , Intel நிறுவன பங்குகளின் மதிப்பு ஒரு கட்டத்தில் 30% வரையும் வீழ்ச்சியடைந்தன.
வெள்ளியன்று இந்திய பங்குச்சந்தை 1% மேல் இறக்கத்தை சந்தித்தது. அமெரிக்க பொருளாதார சுணக்கம், டாலருக்கு எதிராக ஜப்பான் & சுவிஸ் Franc போன்ற நாடுகளின் currency மதிப்புகளை உயர்த்தி வருகிறது. டாலர் மதிப்பு வீழ்வதால் தங்கம் & கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கிறது. இதனால் இறக்குமதி அளவு அதிகரிக்கும் என்பதால், இந்திய ரூபாயின் மதிப்பும் நாளுக்குநாள் இறங்கி வருகிறது. உலகளவில் நிகழும் பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலையால் வரும் வாரம் பங்குசந்தை இறக்கத்தை சந்திக்க நேரிடலாம். மேலும் இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களுக்கு ஜூன் காலாண்டு முடிவுகள் ஏமாற்றம் தருவதாகவே வருகிறது. நிப்ட்டி 22000 வரை கூட செல்லலாம் என சில அனலிஸ்டுகள் எச்சரிக்கின்றனர். எனவே முதலீட்டாளர்கள் கவனமாக முதலீடுகளை மேற்கொள்வது நல்லது.