வணிகம்

17 மாதங்களில் ரூ.900 கோடி இழப்பு... மலையாள திரையுலகம் தவிப்பதன் பின்புலம்!

17 மாதங்களில் ரூ.900 கோடி இழப்பு... மலையாள திரையுலகம் தவிப்பதன் பின்புலம்!

நிவேதா ஜெகராஜா

கொரோனா பரவல், அதனால் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக 17 மாதங்களாக மலையாள திரையுலகம் முன்னெப்போதும் சந்திக்காத சிக்கலை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக சற்றே விரிவாக பார்க்கலாம்.

மற்ற தொழில்களைப் போலவே சினிமா தொழிலையும் கொரோனா முடங்கியுள்ளது. இந்தியாவில் இருக்கும் மற்ற சினிமா இண்டஸ்ட்ரீகளை விட சிறிய அளவிலான சினிமா இண்டஸ்ட்ரீ என்றால் மலையாள சினிமாவை குறிப்பிடலாம். கொரோனா தொற்று காரணமாக, இந்த 17 மாத காலகட்டத்தில் மலையாள திரையுலகம் ரூ.900 கோடிக்கும் அதிகமாக இழப்பை சந்தித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த இழப்பு மலையாள திரையுலகம் இதுவரை சந்திக்காத ஒரு நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பெரிய படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை கடந்த 17 மாதங்களுக்கும் மேலாக முடங்கி கிடக்கின்றன. முதல் அலையின்போது, மாநில அரசு தியேட்டர்களை மூடிவிட்டு, 2020 மார்ச் முதல் 2021 ஜனவரி வரை திரைப்பட படப்பிடிப்புகளை தடை செய்தது.

கேரளாவில் 620 தியேட்டர்கள் உள்ளன. இதில் 289 மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள். கொரோனா முதல் தொற்று குறைந்த பிறகு சில மாதங்கள் இந்த திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், மே மாதத்தில் கோவிட் இரண்டாவது அலை ஏற்பட்ட பின்னர் இவை மீண்டும் மூடப்பட்டன. இதனால் மோகன்லால் - பிரியதர்ஷன் கூட்டணியின் உருவான பெரிய பட்ஜெட் படமான 'மரக்கையர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்', ஃபஹத் பாசில் - மகேஷ் நாராயணன் கூட்டணியின் 'மாலிக்', நிவின் பாலி - ராஜீவ் ரவி இணைந்துள்ள 'துறைமுகம்', பிருத்விராஜின் 'குருதி', 'ஆடுஜீவிதம்', லிஜோ ஜோஸ் பல்லிசேரியின் 'சுருளி', துல்கர் சல்மானின் 'குரூப்', இன்னும் பல படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன.

இந்தப் படங்களில் செலவினங்கள் மட்டும் 270 கோடி ரூபாய். பெரும்பாலும் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் முடிந்த இந்தப் படங்கள் பிந்தைய தயாரிப்புகளை 2020-21ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், அது நடப்பதற்கான அறிகுறிகள்கூட தெரியவில்லை. "தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று எங்களுக்குத் தெரியாததால் மலையாள திரையுலகில் நிச்சயமற்றத் தன்மை நிலவி வருகிறது. மார்ச் மாதத்தில், தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகள் நிரப்பப்படும் வகையில் திறக்கப்பட்டன. ஆனால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, போடப்பட்ட லாக்டவுனால் மே 8 ஆம் தேதி மீண்டும் மூடப்பட்டன. தற்போது மொத்தம் சுமார் 60 படங்கள் வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன" என்கிறார் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் எம்.ரஞ்சித்.

கொரோனாவால் மலையாள சினிமா இழந்த இந்த ரூ.900 கோடி, அந்த திரையுலகத்தின் ஒரு ஆண்டு வருமானம் ஆகும். கடந்த 17 மாதங்களில் சுமார் 5,000 பேர் நேரடியாகவும் 10,000 பேர் மறைமுகமாகவும் வேலையில்லாமல் இருப்பதால் இந்த வீழ்ச்சி மலையாள சினிமா துறையை மீட்க முடியாத இடத்தில் வைத்துள்ளது. கொரோனா தாக்குவதற்கு முன்பே திரையுலகம் மந்தமான நிலையில் இருந்தது. மலையாள திரையுலகைச் சேர்ந்த ஒருவர் அளித்த தகவல்படி, "பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைகின்றன, மேலும் பெரும் இழப்பை சந்திக்கின்றன, ஏனெனில் தயாரிப்பாளர்கள் திரைப்பட தயாரிப்பின் சிக்கல்களை அறிந்திருக்கவில்லை. 2019 இல் வெளியான 192 படங்களில், 23 படங்கள் மட்டுமே வெற்றியை ஈட்டின. தண்ணீர் மத்தான் தினங்கள் உட்பட இதில் ஏழு படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றன" என்றுள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனரான பாசில் ஜோசப், "இது திரையுலகிற்கு கடினமான நேரம். கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் துணை ஊழியர்கள் பல மாதங்களாக வேலை இல்லாமல் இருப்பதால் வாழ்க்கையை சமாளிக்க போராடி வருகின்றனர். இது எப்போது முடியும் என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறோம். ஆனால் அதனை வெளியிட ஏற்படும் தாமதம் அதன் வெற்றியை பாதிக்கலாம். படப்பிடிப்பு முடிந்து காத்திருக்கும் பெரும்பாலான தியேட்டர்களுக்காகவே தவிர ஓடிடி வெளியீட்டிற்காக அல்ல. சினிமா துறையை பேரழிவிலிருந்து காப்பாற்ற மாநில அரசு நடவடிக்கை எடுத்து உத்திகளை வடிவமைக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர்மட்டுமல்ல, கேரள அரசின் விருது பெற்ற நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் செம்பன் வினோத் ஜோஸ், ``நானும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் 'சுருளி' படத்தை நான் இணைந்து தயாரித்தேன். லாக்டவுனால் எங்களால் படத்தை வெளியிட முடியவில்லை. கொரோனா பரவல் காரணமாக தடைபட்டுள்ள படங்களை வெளியிடுவதற்கு கேரளாவின் சொந்த ஓடிடி தளத்தை உருவாக்க வேண்டும். 3 மில்லியன் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச இணையத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் (கே-ஃபோன்) கொண்ட ஒரே மாநிலம் கேரளா. எனவே திரைப்படங்களை வெளியிடுவதற்கு தொழில்துறையுடன் இணைந்து மாநில அரசு ஒரு புதிய தளத்தை உருவாக்க வேண்டும்" என்று தனது தரப்பு கோரிக்கையை வைத்துள்ளார்.

மோகன்லால் தலைமையிலான மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (அம்மா) மற்றும் நடிகர்-பட-எழுத்தாளர் ரென்ஜி பானிக்கர் தலைமையிலான கேரள திரைப்பட ஊழியர் சம்மேளனம் (ஃபெஃப்கா) ஆகியவை திரைத்துறையினருக்கு ஓர் உதவி தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்பது குறித்தும், திரைப்படத் தயாரிப்பை ஆதரிப்பது குறித்தும் மாநில அரசாங்கத்தை அணுகி கோரிக்கைகளை வைத்துள்ளன.

மலையாள திரைப்படத் துறையின் தயாரிப்பு மற்ற தென்னிந்திய திரையுலகிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மெகா தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் - அரசியல் ஆதரவு கொண்ட தயாரிப்பு நிறுவனங்கள் கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் இருப்பதுபோல் மலையாள திரையுலகில் கிடையாது. பெரும்பாலும், மல்லுவுட்டில் தயாரிக்கப்படும் பெரும்பாலான படங்கள் சிறிய தயாரிப்பு நிறுவனங்கள் கொண்டே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த திரையுலகம் தியேட்டர் வெளியீட்டை நம்பியே இருக்கின்றன.

ஓடிடி வெளியீடுகள் மல்லுவுட்டுக்கு கிடைத்த சோதனை முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாம் அலையில் ஓடிடி தளத்தில் வெளியான முதல் பெரிய படமான மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம் 2' ஓடிடியிலிருந்து ரூ.25 கோடியும், செயற்கைக்கோள் உரிமையிலிருந்து ரூ.15 கோடியும் வசூலித்தது. இந்த வெற்றியை தாண்டி, ஜீ 5-இல் வெளியான தருண் மூர்த்தி இயக்கிய சைபர்-க்ரைம் த்ரில்லர் படமான 'ஆபரேஷன் ஜாவா', ஃபஹத் பாசில் படங்களான 'ஜோஜி' மற்றும் 'இருள்' ஆகியவை ஓடிடி தளங்களில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளாதாக கூறப்படுகின்றன. என்றாலும், கொரோனா சூழல் இருக்கும் இந்த சிறிய திரையுலகம் பெரிய இழப்பை சந்தித்துக்கொண்டே இருக்கும். இதனை தற்காலிகமாக சமாளிக்க அரசு உதவியை மலையாள திரையுலகம் எதிர்நோக்கியுள்ளது.

தகவல் உறுதுணை: India Today