மஹிந்திரா நிறுவனம் அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்த முடிவெடுத்திருக்கிறது. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக விலை உயர்த்தப்படுகிறது. அதாவது, ஜனவரி மற்றும் மே மாதத்துக்கு பிறகு மூன்றாம் முறையாக தற்போது உயர்த்தப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் 'தார்' மாடல் கார் அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய் வரை உயர்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது. ரூ.42,300 முதல் 1,02,000 ரூபாய் வரை இந்த மாடல் காரின் விலை உயர இருக்கிறது. இந்த மாடல் காருக்கு தேவை அதிகமாக இருக்கிறது. தவிர, முன்பதிவு செய்தால் பல மாதங்களுக்கு காத்திருக்கும் சூழலும் இருக்கிறது.
எக்ஸ்யூவி 500 மாடல் கார்களின் விலையில் பெரிய ஏற்றம் இல்லை. ரூ.2912 முதல் ரூ.3,188 வரை மட்டுமே இந்த மாடல் கார்களின் விலை ஏற்றம் இருக்கிறது. அதேபோல கேயுவி 100 என்.எக்ஸ்.டி மாடல் காரின் விலையில் 3016 ரூபாய் முதல் 3344 ரூபாய் வரை ஏற்றம் இருக்கும் என மஹிந்திரா அறிவித்திருக்கிறது.
மஹிந்திராவின் பிரபலமான மாடல் காரான பொலிரோவின் விலை ரூ.21,000 முதல் 22,600 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஸ்கார்பியோ மாடல் காரின் விலையும் சுமார் 30,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை விலை உயர இருக்கிறது.
இது தவிர, நிறுவனத்தின் பெரும்பாலான மாடல் கார்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் (இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம்) தொடர்ந்து விலையை உயர்த்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக மூலப்பொருட்களின் விலையேற்றத்தையே குறிப்பிடுகின்றன.
பெட்ரோல், டீசல் விலையேற்றம் இருக்கும் சூழலில் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தொடர்ந்து விலையை உயர்த்து வருகின்றன. புதிதாக வாகனம் வாங்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு இரட்டை சிக்கல்தான்.