வணிகம்

ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்க தடை கோரிய மனு தள்ளுபடி

ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்க தடை கோரிய மனு தள்ளுபடி

ஜா. ஜாக்சன் சிங்

ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடாவின் டாலேஸ் நிறுவனத்துக்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல், ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு வழங்க தடை விதிக்கக் கோரி, ஏர் இந்தியா ஊழியர்கள் தொழிற்சங்கமான ஏர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவை வாங்கும் டாடா நிறுவனம், தற்போதைய ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும்" என அதில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன் பிறப்பித்த உத்தரவில், "ஏர் இந்தியா நிறுவனத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் வரிப் பணத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த முதலீட்டை பாதுகாக்கவே அது டாடா நிறுவனத்துக்கு விற்கப்படுவதாக அரசு கூறியுள்ளது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. பங்கு விற்பனை போன்ற பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.