வணிகம்

குறைந்த முதலீடு! அதிக வட்டி! ஆசை யாரை விட்டது? படித்தவர்களும் பணத்தை பறிகொடுக்கும் அவலம்!

குறைந்த முதலீடு! அதிக வட்டி! ஆசை யாரை விட்டது? படித்தவர்களும் பணத்தை பறிகொடுக்கும் அவலம்!

ச. முத்துகிருஷ்ணன்

மோசடிப் பேர்வழிகளை கைது செய்து சிறையில் தள்ள முடியுமே ஒழிய, காசு திரும்ப கிடைக்க வாய்ப்பு மிக மிக குறைவே! ஒரு ரூபாய்க்கு 40-60 பைசா கிடைப்பதே அரிது என்பதால் துவக்கத்திலே கவனமாக இருப்பது அவசியம்

குறைந்த முதலீடு... அதிக வட்டி... என்ற ஆசை யாரை விட்டது?... அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த நிறுவனங்களைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும், ஏமாறும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. கடந்த காலங்களில் இருந்து தற்போது வரை பல நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளன.

  • மதுரையை மையமாக வைத்து பல்வேறு பெயர்களில் தொடங்கப்பட்ட மோசடி நிதி நிறுவனத்தில் ஒன்றான க்ரீன் டெக் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஜி-கேர் என்ற இன்னொரு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் முதலீடு செய்ய வைத்தனர். ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகவும், 13ஆவது மாதத்தில் முதலீட்டை திருப்பித் தருவதாகவும் கூறி 12,000 பேரிடம் 500 கோடி ரூபாய்க்குமேல் பணம் பெற்று ஏமாற்றியுள்ளனர்.
  • சென்னை தி நகரில் மல்டிபிள் பைனான்ஸ் இன்வெஸ்மெண்ட் அண்ட் ஆக்ரோடெக் என்ற பெயரில் தனியார் சீட்டு கம்பெனி நிறுவனம் மக்களிடமிருந்து 68 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றியது. சீன ஆப்களான பவர் பேங்க் ஆப், டெஸ்லா பவர் பேங்க் ஆப்களை நம்பி பணத்தை முதலீடு செய்த சென்னையைச் சேர்ந்த 37 பேர் மொத்த முதலீட்டையும் இழந்து தவிக்கின்றனர். தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் இதே போல் பலர் ஏமாந்திருக்கின்றனர்
  • சேலத்தில் பள்ளிப்படிப்பைக்கூட முடித்திடாத பரோட்டா மாஸ்டரின் தலைமையில் திருமலை டிரேடர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, அதிக வட்டி தருவதாக ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் 3 கோடி ரூபாய் வரை சுருட்டி இருக்கின்றனர்.
  • மதுரை பெத்தானியபுரத்தில் இயங்கி வந்த பாரத மாதா பவுண்டேஷன் நிறுவனத்தில் ஆயுர்வேத மருந்துகள் விற்பனை என்கிற பெயரில் ஆர்வமுடையவர்களை உறுப்பினர்களாக சேர்த்து அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை உறுப்பினர்களுக்கு பங்கீடு செய்து தருவதாக மோசடி நடந்துள்ளது. அண்மையில் ராமநாதபுரத்தில் அதிக வட்டி தருவதாக கூறி 3 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
  • ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறி ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது கடந்த மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி, கணக்கில் காட்டப்படாத 3 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தற்போது இந்த விவகாரம் கொளுந்துவிட்டு மீண்டும் பற்றி எரியக் காரணம் தேனியில் நடைபெற்ற மோசடிச் சம்பவம் ஆகும். தேனியில் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம்தோறும் 10 விழுக்காடு வட்டி தருவதாகவும், 10 விழுக்காடு வட்டியில் ஒரு சதவிகித வட்டி அரசுக்கு வரிப்பிடித்தமாக செலுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அரசுக்கு வரி செலுத்தியது போக 9 விழுக்காடு வட்டி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேனி நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர் மொத்தம் 11 கோடிரூபாய்க்கு மேல் தங்கள் பணத்தை நிதி நிறுவனத்திற்கு கொடுத்துள்ளனர். முதல் மூன்று மாதங்கள் முறையாக வட்டி வழங்கப்பட்டுள்ளது. பின்னர் கொரோனா முடக்கத்தை காரணமாக கூறி வட்டி வழங்குவது நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கொரோனா முடக்கம் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பிய பின்னரும், வட்டியும் வழங்கப்படவில்லை, அசலும் வழங்கப்படவில்லை என தெரிகிறது. ஒருகட்டத்தில் நிதி நிறுவனமும் பூட்டப்பட்டு, அதில் இருந்தவர்களும் தலைமறைவாகிவிட்டதாக பணத்தை கொடுத்த மக்கள் புகார் அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பாதிக்கப்பட்டவர்கள், நிதி நிறுவன அதிபரை கைது செய்து, தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ள மாவட்ட ஆட்சியர் முரளிதரன், காவல்துறை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து புதிய தலைமுறையின் நியூஸ் 360 டிகிரி நிகழ்ச்சியில் தனது கருத்துகளை பகிர்ந்துகொண்ட ஆடிட்டர் ஸ்ரீநிவாசன், “முன்பெல்லாம் ஏழைகள், பாமர மக்கள் ஏமாறுவார்கள். ஆனால் தற்போது மெத்தப் படித்தவர்கள் எந்த முன்யோசனையும் இல்லாமல் ஏமாந்துபோவது இப்போது மிக சாதாரணமாகி விட்டது. வருடத்திற்கு 10% வட்டி தருவதே கடினமான இந்த காலகட்டத்தில் மாதம் 10% வட்டி தருகிறோம் என்பதை படித்தவர்கள் எப்படி நம்புகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

முதல் 3 மாதங்களுக்கு இந்த 10% வட்டி வழங்கப்படுகிறது. ஏனென்றால் அவ்வாறு வழங்கினால் அடுத்தடுத்து ஆட்களை சேர்க்க முடியும். ஏற்கனவே சேர்ந்தவர்களை காட்டி புதியவர்களிடம் நம்பிக்கையை சம்பாதித்து அவர்களையும் முதலீடு செய்ய வைக்க முடியும். போதுமான காசு சேர்ந்ததும் கம்பி நீட்டுவது இந்த நிறுவனங்களின் வாடிக்கை. சோகம் என்னவென்றால், அந்த நபர்களை கைது செய்து சிறையில் தள்ள முடியுமே ஒழிய, காசு திரும்ப கிடைக்க வாய்ப்பு மிக மிக குறைவே! ஒரு ரூபாய்க்கு 40-60 பைசா கிடைப்பதே அரிது என்பதால் துவக்கத்திலே கவனமாக இருப்பது அவசியம்” என்று கூறினார்.

மக்களை கவருவதற்காக விதவிதமான விளம்பரங்களை வெளியிட்டு ஆசைகளை தூண்டும் ஏமாற்றும் நிறுவனங்கள் புதுசு புதுசாக வந்தாலும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியே மிகவும் அவசியம்.

இதுதொடர்பாக புதிய தலைமுறையில் 360 டிகிரி நிகழ்ச்சியில் முன் வைக்கப்பட்ட கருத்துகளை முழுமையாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.