வணிகம்

பொதுமுடக்கம் எதிரொலி: 'இ-காமர்ஸ்' பிரிவில் வளர்ச்சி யாருக்கு?

பொதுமுடக்கம் எதிரொலி: 'இ-காமர்ஸ்' பிரிவில் வளர்ச்சி யாருக்கு?

நிவேதா ஜெகராஜா

கொரோனாவுக்கு பிறகு இ-காமர்ஸ் நிறுவனங்களில் விற்பனை உயர்ந்திருக்கிறது என பலர் சொல்லக் கேட்டிருப்போம். இந்த வாக்கியம் பாதி மட்டுமே உண்மை என்பதுதான் யதார்த்த நிலவரம்.

தற்போதைய நிலவரத்தைப் பொறுத்தவரையில், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. அதேசமயம் எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் உள்ளிட்ட பல பிரிவுகளில் விற்பனை குறைந்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக, 55 லட்சம் பார்சல்கள் சராசரியாக விற்பனை செய்யபட்டு வந்தன. ஆனால், கடந்த ஏப்ரலில் இந்த எண்ணிக்கை குறைந்து, 45 லட்சம் மட்டுமே பார்சல் செய்யப்பட்டிருக்கிறது. நிச்சயமற்ற சுழலால் அவசியமில்லாத பொருட்களை வாங்குவதை மக்கள் குறைத்திருக்கிறார்கள்.

ஆனால், மளிகை பொருட்களை விற்பனை செய்யும் 'பிக்பாஸ்கட்' நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் சுமார் ரூ.8,000 கோடி (1 பில்லியன் டாலர்) அளவுக்கு பொருட்களை விற்பனை செய்திருக்கிறது. 'அமேசான்', 'பிளிப்கார்ட்' உள்ளிட்ட நிறுவனங்கள் பல பொருட்களை விற்பனை செய்வதால் ஒரு பில்லியன் டாலர் விற்பனை என்பது சாத்தியம். ஆனால், மளிகை பொருட்களை மட்டுமே விற்பனை செய்யும் நிறுவனம் இந்த எல்லையை அடைந்திருக்கிறது.

கொரோனா காலத்துக்கு முன்பாக 40 சதவீத அளவுக்கு வளர்ச்சி அடைந்த நிறுவனம், கடந்த நிதியாண்டில் (2020-2021) 80 சதவீத அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. தற்போதைய வளர்ச்சி தொடரும் பட்சத்தில் நடப்பு நிதி ஆண்டு முடிவில் ரூ.12,000 கோடி அளவுக்கு விற்பனை இருக்கும் என 'பிக்பாஸ்கட்' தெரிவித்திருக்கிறது.

கொரோனாவுக்கு முன்பாக தினமும் 2.5 லட்சம் ஆர்டர்கள் வந்தன. ஆனால், கொரோனாவுக்கு பிறகு சராசரியாக 3.5 லட்சம் ஆர்டர்கள் வருவதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இ-காமர்ஸ் வளர்ச்சி அடைந்தாலும் அனைத்து பிரிவிலும் வளர்ச்சி இல்லை என்பதுதான் யதார்த்தம்.