ஜியோவின் 1.16% பங்குகளை அபுதாபி முதலீட்டு நிறுவனம் ஒன்று ரூ.5,683 கோடிக்கு வாங்கியுள்ளது.
கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜியோவின் 9.99% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.43,573.62 கோடி வாங்கியதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று ஜென்ரல் அட்லாண்டிக், கேகேஆர் உள்ளிட்ட நிறுவனங்களும் ஜியோ பங்குகளில் முதலீடு செய்தன.
இந்நிலையில் தற்போது 8வது நிறுவனமாக அபுதாபி முதலீட்டு நிறுவனம் ரூ.5,683.50 கோடியை ஜியோ பங்குகளில் முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் 1.16% ஜியோ பங்குகளை அந்நிறுவனம் வாங்கியுள்ளது. அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை 1.85% பங்குகளை அபுதாபியைச் சேர்ந்த மற்றொரு முதலீட்டு நிறுவனமான முபாடலா வாங்கியிருக்கிறது.
இதனால் ஜியோவின் 21% பங்குகள் இதுவரை விற்பனையாகியுள்ளன. இந்திய மதிப்பில் மொத்தம் ரூ.97,885.65 கோடி ஜியோ பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.