வணிகம்

ஜிஎஸ்டிக்குள் வருகிறதா பெட்ரோல், டீசல்? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு

ஜிஎஸ்டிக்குள் வருகிறதா பெட்ரோல், டீசல்? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு

JustinDurai
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி நடைமுறைக்குள் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லக்னோவில் நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பில் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நெடுநாளாக இருந்து வருகிறது. அவ்வாறு செய்தால் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பிருந்தாலும் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் அது குறித்து விவாதிக்கப்படாமல் இருந்து வந்தது.
எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேரள உயர் நீதிமன்றமும் இந்தாண்டு தொடக்கத்தில் ஜிஎஸ்டி கவுன்சிலை வலியுறுத்தியிருந்தது. இந்த சூழலில் புதிய திருப்பமாக பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரலாமா என்பது குறித்து ஆலோசிக்க மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு ஜிஎஸ்டி கவுன்சிலில் முன்வைத்தால் அது ஏற்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
ஏனெனில் ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள மாநிலங்களில் 4இல் 3 பங்கிற்கு மேற்பட்டவற்றில் பாஜக ஆட்சியில் இருப்பதால் அந்த யோசனை நிச்சயம் நிறைவேறும் நிலை உள்ளது. அதே நேரம் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர சில மாநில அரசுகள் எதிர்த்து வருகின்றன. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் வரும் பட்சத்தில் பெட்ரோல் லிட்டர் 75 ரூபாயாகவும் டீசல் 68 ரூபாயாகவும் குறையும் என எஸ்பிஐ ரிசர்ச் நிறுவனம் கணித்துள்ளது. இதற்கிடையே ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற உணவு சேவை நிறுவனங்களையும் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து 5% வரி விதிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.