வணிகம்

அதென்ன INR கரன்சி தேய்மானம்? இதனால் நடுத்தர மக்களுக்கு என்ன பிரச்சனை?

அதென்ன INR கரன்சி தேய்மானம்? இதனால் நடுத்தர மக்களுக்கு என்ன பிரச்சனை?

webteam

உங்கள் வீட்டில் தங்கம் வாங்குவது, வண்டிக்கு பெட்ரோல் டீசல் போடுவது, காய்கறி விலை அதிகரிப்பது தொடங்கி... அன்றாட பொருளாதார நடவடிக்கைகளில் கண்ணுக்கே தெரியாமல் பல விளைவுகளை இந்த கரன்சி தேய்மானம் ஏற்படுத்தும்

இந்திய ரூபாய் மதிப்பு ஓர் எளிய விளக்கம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கரன்சியின் மதிப்பு சரிவதையே கரன்சி தேய்மானம் என்கிறார்கள்.
$1 = 50 ரூபாய் என்கிற நிலையில் இருந்து $1 = 45 ரூபாய்க்கு வந்தால் இந்திய ரூபாய் மதிப்பு வலுவடைந்திருக்கிறது / அதிகரித்திருக்கிறது என்று பொருள்.
$1 = 60 ரூபாய் என்றால் இந்திய ரூபாய் பலவீனமடைந்திருக்கிறது / சரிந்திருக்கிறது என்று பொருள்.

ஒரு நாட்டின் கரன்சிக்கு டிமாண்ட் இருந்தால், அதன் மதிப்பு அதிகரிக்கும். டிமாண்ட் இல்லை அல்லது அந்நாட்டு கரன்சியை எவரும் வாங்க மறுக்கிறார்கள் என்றால், அது அந்நாட்டு கரன்சியின் மதிப்பைக் குறைக்கும் எனலாம்.

பல உலக நாடுகள் தங்கள் ரிசர்வ் கரன்சிகளில் அமெரிக்க டாலர், ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ, ஜப்பான் நாட்டின் யென்... போன்ற கரன்சிகளை வைத்திருப்பார்கள்.

கடந்த 2022 ஜனவரி - மார்ச் (முதல் காலாண்டு) காலத்தில் உலக அளவில் 58.88 சதவீத ரிசர்வ் கரன்சி அமெரிக்க டாலராகவும், 20.06 சதவீத கரன்சி ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ கரன்சியாகவும் இருப்பதாக சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் தரவுகள் கூறுகின்றன.

உலக நாடுகளில் அதிகமாக அமெரிக்க டாலர் பயன்படுத்தப்படுவதால் அதன் மதிப்பு மற்ற கரன்சிகளை விட நிலையாக நிற்கிறது. இந்திய ரூபாயை இந்தியா தவிர அதிக நாடுகள் பயன்படுத்துவதில்லை, எனவே அதன் மதிப்பு அத்தனை வலுவாக இல்லை.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைவால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன?

நன்மைகள்:
1. ஏற்றுமதி அதிகரிக்கலாம்: திருப்பூரில் உள்ள ஒரு ஆடை நிறுவனம் ஒரு சட்டையை 75 ரூபாய்க்கு விற்கிறது என வைத்துக் கொள்வோம்.

ஜனவரி 2022 காலத்தில் $1 = 75 ரூபாய் என்று இருந்தது. ஒரு வெளிநாட்டு நிறுவனம் திருப்பூரில் சட்டை வாங்க வந்தால் $1 = 75 என்கிற கணக்கில் ஒரு டாலருக்கு ஒரு சட்டை என வாங்கும்.

இப்போது $1 = 80 ரூபாய். 2022 ஜூலை மாதம் அந்த வெளிநாட்டு நிறுவனம் சட்டை வாங்க வந்தால் $0.9375 டாலருக்கு ஒரு சட்டை வாங்கும். இதில் திருப்பூர் கம்பெனிக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. கரன்சி பலவீனமாக இருப்பதால் வெளிநாட்டு நிறுவனம் திருப்பூர் கம்பெனியிடம் வாங்கிச் செல்லும்.

2. அந்நிய செலாவணி: நம் அண்ணன் தம்பிகள், பெற்றோர் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார்கள் என்றால், அவர்களுடைய சம்பளப் பணம் பெரும்பாலும் அமெரிக்க டாலரில் தான் வரும். அவர்கள் இந்தியாவுக்கு அமெரிக்க டாலரை அனுப்பும் போது, நமக்கு இங்கு அதிக பணம் கிடைக்கும். $1000 = 75,000 என்று இருந்த நிலை மேம்பட்டு அதே $1000 = 80,000 ரூபாய் கிடைக்கும். இதே பலன் இந்தியாவில் இருந்துகொண்டு அமெரிக்க டாலரில் முதலீடு செய்பவர்களுக்கும் கிடைக்கும்.

சிரமங்கள் என்ன?

1. எகிறும் இறக்குமதி செலவுகள் & பணவீக்க இறக்குமதி: இப்போதும் இந்தியா தன் பெரும்பாலான கச்சா எண்ணெய், மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும் பல மூலப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்கிறது. உலக அளவில் பல வர்த்தகர்கள் அமெரிக்க டாலரில்தான் பணம் செலுத்தச் சொல்வர். இனி ஒவ்வொரு டாலரை வாங்கவும் ஒரு சில ரூபாய் கூடுதலாகக் கொடுக்க வேண்டி இருக்கும். இந்த கூடுதல் விலையை, அப்பொருளை வாங்கும் வாடிக்கையாளர்கள் தலையில் தான் நிறுவனங்கள் இறக்கி வைக்கும்.

உதாரணத்துக்கு ஆப்பிள் ஐஃபோன் 13-ஐ எடுத்துக் கொள்ளலாம். தோராயமாக இதன் விலை $800 என வைத்துக் கொள்வோம். ஜனவரி 2022 காலத்தில் 60,000 கொடுத்து வாங்கிய ஃபோனை, தற்போது 64,000 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். இதை கடைக்காரர்களே நினைத்தாலும் குறைக்க முடியாது. இதை ஆங்கிலத்தில் Imported Inflation என்பார்கள்.

பணவீக்கம்: கச்சா எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்தால், அது மெல்ல மற்ற பொருட்களின் விலையையும் அதிகரிக்கச் செய்யும். எடுத்துக்காட்டுக்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய, அதிக ரூபாயைக் கொடுத்து டாலர் வாங்கி இறக்குமதி செய்ய வேண்டும். இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து காய்கறி விலை அதிகரிக்கும் மற்றும் ஆட்டோ, டாக்ஸி கட்டணம் அதிகரிப்பதைப் பார்க்கலாம். பேருந்துக் கட்டணம், பால் விலை போன்றவைகள் கூட இதனால் உயரலாம்.

வட்டி விகிதம் அதிகரிக்கும்: இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை அதிகரிக்கும். அது நாம் வாங்கப் போகும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கச் செய்யும். அது நம் இ எம் ஐ தொகை அல்லது கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை அதிகரிக்கும். சுருக்கமாக நாம் அதிகப்படியான பணத்தை கடன்கொடுத்த வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டி இருக்கும்.

வெளிநாட்டுக் கல்வி, மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்: இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுக்கு மருத்துவ சிகிச்சைகளுக்காக பயணிப்பவர்கள் அனைவரும் கூடுதல் பணத்தைச் செலுத்தி அமெரிக்க டாலரைப் பெற வேண்டி இருக்கும்.

- கெளதம்