வணிகம்

விசா கட்டுப்பாடுகள் காரணமா?: இந்திய நிறுவனங்களில் அதிகரிக்கும் அமெரிக்க ஊழியர்கள்!

webteam

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் அமெரிக்க ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதாக மென்பொருள் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கமான நாஸ்காம் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகிய நான்கு நிறுவனங்களில் மட்டுமே 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க ஊழியர்கள் பணிபுரிவதாக நாஸ்காம் கூறியுள்ளது.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்கா உள்பட பல நாடுகளில் கிளைகள் உள்ளன. இந்நிறுவனங்கள் இந்தியர்களை அமெரிக்காவில் உள்ள அதன் கிளைகளில் பணிக்கு அமர்த்தி வந்தன. அமெரிக்காவிற்கு விசா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டு ஊழியர்களைக் கொண்டே அங்குள்ள பணியிடங்களை நிரப்பி வருகின்ற‌ன. அந்தவகையில், அமெரிக்காவில் செயல்படும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டும் ஒரு லட்சம் அளவில் அமெரிக்கர்கள் பணியாற்றுகின்றனர் என நாஸ்காம் தெரிவித்துள்ளது.

அதன்படி, டிசிஎஸ் நிறுவனத்தில் 20 ஆயிரம் அமெரிக்க ஊழியர்களும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 14 ஆயிரம் அமெரிக்கர்களும், ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 13 ஆயிரத்து 400 பேரும், விப்ரோ நிறுவனத்தில் 10 ஆயிரம் அமெரிக்கர்களும் பணிபுரிந்து வருவதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டாலும் இந்தியாவை பாரம்பரியமாகக் கொண்டு செயல்படும் காக்னிசன்ட் நிறுவனத்தில் மட்டும் 46 ஆயிரத்து 400 அமெரிக்கர்கள் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது.