வணிகம்

உலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியல்: இந்தியாவின் இடம் என்ன ?

உலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியல்: இந்தியாவின் இடம் என்ன ?

jagadeesh

உலகின் மதிப்புமிக்க நாடுகளின் முன்னணி 20 நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய சொத்து மதிப்பீட்டு நிறுவனமான 'பிராண்டு பினான்ஸ்' நிறுவனம் உலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனம் ஒரு நாட்டிற்கான 'பிராண்டு வேல்யவை கணக்கிட அந்த நாட்டில் விற்பனையாகும் அனைத்து பிராண்டுகளின் 5 ஆண்டு விற்பனை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டின் உலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியலை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் முந்தைய ஆண்டில் முறையே 1 முதல் 3 இடங்களில் இருந்த அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தற்போதும் தங்களது இடங்களை தக்க வைத்துள்ளது.

இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு 4வது இடத்தில் இருந்த இங்கிலாந்து இந்த ஆண்டு 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் கடந்த ஆண்டு 5வது இடத்தில் இருந்த ஜப்பான் தற்போது 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 6வது இடத்தில் தொடர்ந்து பிரான்ஸ் உள்ளது. இதில் கடந்த முறை 9 ஆம் இடத்தில் இருந்த இந்தியா 2 இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் கனடா, தென்கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முறையே 8,9 மற்றும் 10வது இடங்களில் உள்ளன.

இந்தியா பிராண்ட் வேல்யூ கடந்த ஆண்டில் மட்டும் 18.6 சதவீதம் உயர்ந்து 2,18,300 கோடி டாலராக உயர்ந்துள்ளது. உலக சர்வதேச பொருளாதார சரிவின் பாதிப்பிலிருந்து இந்தியா வேகமாக மீண்டது. இருப்பினும் உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகளில் நிலவும் மந்தநிலையால் தற்போது அதன் வளர்ச்சி குறைந்துள்ளது  என பிராண்ட் பினான்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.