வணிகம்

நாடு முழுவதும் உள்ள செல்போன் உதிரிபாக நிறுவனங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை

நாடு முழுவதும் உள்ள செல்போன் உதிரிபாக நிறுவனங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை

Veeramani

நாடு முழுவதும் செல்போன் நிறுவனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும்  ஓப்போ மொபைல்ஸ் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களிலும், செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக சென்னை ஓ.எம்.ஆர் சாலையிலுள்ள ஓப்போ மொபைல்ஸ் தலைமையிடம் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பாக்ஸ்கான் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனையானது நடந்து வருகிறது.  இந்தியாவை பொறுத்தவரை சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளின் நிறுவனங்களே செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனங்களாக செயல்பட்டு வருகிறது.

ஓப்போ மற்றும் பாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்கள் நாடு முழுவதும் கிளை அமைத்து நிறுவனத்தை விரிவுபடுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக குறிப்பிட்ட செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வருமானத்தை மறைத்துக்காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் கிரிப்டோ கரன்சிகளாக மாற்றி முதலீடு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளதால், இந்த நிறுவனமும் வருமானத்தை மறைத்து முதலீடு செய்துள்ளார்களா? என சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தி வருவதாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த சோதனையின் முடிவிலேயே எந்த அளவு வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளது என்பதற்கு உண்டான முழு விவரங்கள் தெரியவரும் என வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது.