ஹவாய் ‘பி30 ப்ரோ’ ஸ்மார்ட்போனின் புதிய மாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து அனைத்து பொருட்களின் விற்பனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஊரடங்கு உத்தரவினால் மக்களின் வாங்கும் திறனும் குறைந்துள்ளது. இதனால் அடுத்த காலாண்டில் அனைத்து பொருட்களின் விற்பனையும் சரிவை சந்திக்கவுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்த விற்பனை சரிவில் செல்போன்களும் அடங்கும். எனவே இந்த ஊரடங்கு காலம் முடிந்த உடன் அனைத்து செல்போன் நிறுவனங்களும் கவர்ச்சிகரமான ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்கும் எனப்படுகிறது. அதேசமயம் ஆஃபர் மட்டும் வாடிக்கையாளர்களை ஈர்க்காது என்பதால், புதிய வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களையும் வழங்க செல்போன் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
அந்த வகையில் ஹவாய் நிறுவனம் தங்கள் பி30 ப்ரோ செல்போனின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை தாயரித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.15 இன்ச் ஹெச் டிஸ்ப்ளே கொண்டது. அத்துடன் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடித்தளமாக கொண்டு 9.1 உடன் இயங்கும். இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் உள்ளது. கூடுதலாக 512 ஜிபி வரை மைக்ரோ ஜிப் மெமரி கார்டு பொறுத்திக்கொள்ள முடியும்.
கேமராவை பொறுத்தவரையில் 48 எம்பி மெயின் கேமராவும், அதனுடன் 8 எம்பி அல்ட்ரா வொயிட் லென்ஸ் மற்றும் 2 எம்பி போக் லென்ஸும் இணைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 32 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. மேலும், 3,340 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் உலகமெங்கும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.