வணிகம்

PT Web Explainer: எந்தச் சூழலிலும் தங்கம் விலை உயரும் என்னும் நம்பிக்கை தவறு. ஏன்?

webteam

ஒவ்வொருக்கும் சில நம்பிக்கைகள் இருக்கும். முதலீடு தொடர்பான ஒரு நம்பிக்கை என்பது தங்கம் விலை குறையாது என்பதுதான். சவரன் ஆயிரம் ரூபாய்க்கு பார்த்தேன். இப்போது 35,000 ரூபாய்க்கு விற்கிறது. எப்படியும் தங்கம் உயரந்துகொண்டுதான் இருக்கும் என்பதில் மாறா நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து 10,000 ரூபாய் அளவுக்கு விலை குறைந்திருக்கிறது என்பதை நம்ப மறுப்பார்கள். இதையும் மீறி ஆதாரத்துடன் விளக்கினால், எப்படியும் உயரும் என்று கூறுவார்கள். 10 கிராம் (எம்சிஎக்ஸ்) தங்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 56,000 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஆனால், தற்போது ரூ.46,000-க்கு வர்த்தகமாகிறது.

கிராம் அடிப்படையில் எடுத்துக்கொண்டால் கூட தற்போது (பிப்ரவரி 22) 22 காரட் தங்கம் ரூ.4,375-க்கு விற்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் ஒரு கிராம் 5400 ரூபாய்க்கு மேலே கூட சென்றது. ஒரு கிராம் 1000 ரூபாய் அளவுக்கு கீழே சரிந்திருக்கிறது.

தங்கம் ஏன் சரிந்தது என பார்ப்பதற்கு முன்பு ஏன் உயர்ந்து என முதலில் பார்ப்போம். தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு என மக்கள் கருதுவதற்கு காரணம், தங்கத்தை சர்வதேச கரன்ஸியாக பயன்படுத்த முடியும். சர்வதேச அளவில் எளிதில் மாற்றிக்கொள்ள முடியும் என்பதாலே தங்கத்தின் மதிப்புக்கு ஒரு காரணம்.

தங்கத்தின் விலை எப்போதெல்லாம் வேகமாக உயர்கிறதோ, அப்போதெல்லாம் சர்வதேச அளவில் ஒரு நிச்சயமற்ற சூழல் உருவாகும். இதுபோன்ற சமயத்தில்தான் தங்கம் விலை உயரும். கடந்த சில ஆண்டுகளாக பெரிய ஏற்றம் அடையாத தங்கம், கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக சர்வதேச அளவில் நிச்சயமற்ற சூழல் இருந்தது. வேலையிழப்புகள், இந்தியா - சீனா எல்லை பதற்றங்கள் உள்ளிட்டவையும் இதர காரணங்களாக இருந்தது.

இதனால், சந்தையில் வேறு முதலீட்டு திட்டங்கள் இல்லை என்பதால், அனைத்து முதலீடுகளும் தங்கத்தை நோக்கி வந்தன. அதனால் தங்கத்துக்கான தேவை அதிகரித்து உயர்ந்தது. எனவே, 2020-ம் ஆண்டு தங்கத்துக்கு முக்கியான ஆண்டாக மாறி இருக்கிறது.

விலை குறைய காரணம்?

தங்கம் விலை குறைவுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது சர்வதேச அளவில் லாக்டவுன் தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை மெதுவாகத் திரும்ப தொடங்கி இருக்கிறது. தவிர, தடுப்பூசியும் வரத்தொடங்கி இருக்கிறது. அதனால் நிச்சயமற்ற சூழல் விலகியவுடன் தங்கத்துகான தேவை குறையத் தொடங்கி இருக்கிறது. மேலும், இதர முதலீட்டு திட்டங்கள் கவர்ச்சிகரமாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, பங்குச்சந்தை முதலீட்டுக்கு ஏற்ற இடமாக மாறுவதால், முதலீடுகள் தங்கத்தில் இருந்து பங்குச்சந்தைக்கு மாறுகின்றன. விலை குறைவதற்கு இதுவும் முக்கிய முதலாவது காரணம்.

டாலர் பலம்

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை, டாலரில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதனால்,ம டாலரின் பலம் மற்றும் பலவீனம் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கும். சர்வதேச அளவில் முக்கிய கரன்ஸிகளுக்கு எதிராக டாலர் பலம் அடைந்துவருகிறது. அதனால், தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் மீட்சியடையும் என்னும் நம்பிக்கை காரணமாக டாலர் மதிப்பு உயர்ந்துவருகிறது. தவிர அமெரிக்க அரசின் பத்தாண்டு கடன் பத்திரங்களின் வருமானமும் உயர்ந்து வருவதால் தங்கத்தின் தேவை குறைந்திருக்கிறது.

சுங்க வரி

கடந்த பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்க வரியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்தார். 12 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது. இருந்தாலும் அக்ரி செஸ் கூடுதலாக விதிக்கப்பட்டது. எப்படி இருந்தாலும் 10 சதவீதத்துக்கு மேல் வரி இருக்காது என்பதால் தங்கத்தின் விலை குறைய இதுவும் ஒரு முக்கியமான காரணம்.

வரி குறைவது, பங்குச்சந்தை உள்ளிட்ட இதர முதலீட்டு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பது மற்றும் இதர கரன்ஸிகளுக்கு எதிராக டாலர் பலம் அடைந்திருப்பது ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.

எதிர்காலம் என்னவாகும்?

கடந்த ஆண்டு தங்கத்தின் விலை 50 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கலாம். ஆனால், கடந்த 56 ஆண்டுகளில் தங்கத்தின் சராசரி வளர்ச்சி என்பது 12.78 சதவீதம் மட்டுமே.

பிஎஸ்இ - சென்செக்ஸ் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சராசரியாக ஆண்டுக்கு 16 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால், கடந்த 40 ஆண்டுகளில் தங்கம் ஆண்டுக்கு 10 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கிறது. பங்குச்சந்தையில் பெரிய ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தங்கத்தில் ஏற்ற இறக்கம் இருக்காது. ஆனால், நீண்ட கால அடிப்படையில் தங்கத்தைவிட பங்குச்சந்தைகளே நல்ல வருமானத்தை கொடுத்திருக்கின்றன.

அதனால், பங்குச்சந்தையிலே மொத்த முதலீட்டையும் செய்ய கூடாது. எந்த ஒரு குறிப்பிட்ட திட்டத்திலும் மொத்த முதலீட்டையும் செய்ய கூடாது. நிதி ஆலோசகர்களின் கருத்துபடி, ஒருவருடைய மொத்த முதலீட்டை 10 முதல் 15 சதவீதம் வரை தங்கம் இருக்கலாம்.

அதேபோல அணிகலன் தேவை என்றால் வாங்கிக்கொள்ளலாம்; அதில் எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனால், தங்கத்தை முதலீட்டாக மட்டுமே பார்க்கிறீர்கள் என்றால், அதற்கு பல வழிகள் உள்ளன. கடன் பத்திரங்கள், மியூச்சுவல் பண்ட்கள், இடிஎப்கள் என பல வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இதுபோன்ற டிஜிட்டல் வழிகளில் முதலீடு செய்யும்பட்சத்தில் பல இதர செலவுகள் (செய்கூலி, சேதாரம்) தவிர்க்கப்படும். நகையாக வாங்கும்பட்சத்தில் பல செலவுகள் இருக்கும். அப்படியானால் தங்கத்தின் அடக்க விலையிலே மாறும் என்பதால் நகையும் ஒரு முதலீடு என முதலீட்டாளர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்.

தங்கம் எப்படி இருந்தாலும் விலை உயரும் என்னும் நம்பிக்கை தவறு. இதர முதலீடுகளை போலவே தங்கத்திலும் ஏற்ற இறக்கம் இருக்கும்; சர்வதேச அளவில் பல காரணிகள் தங்கத்தை விலையை தீர்மானிக்கின்றன என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

- வாசு கார்த்தி