மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் 2 மாத தவணையாக 1.16 லட்சம் கோடியை மாநில அரசுகளுக்கு விடுவித்தது மத்திய நிதித்துறை அமைச்சகம். இதில் தமிழகத்தின் பங்காக 4,758.78 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
மாநில அரசின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள, மாநில அரசின் மூலமாக மத்திய அரசுக்கு கிடைக்கப்பெறும் வரி வருவாயில் பகிர்ந்தளிப்பு நடைமுறையை மத்திய நிதித்துறை அமைச்சகம் பின்பற்றி வருகிறது.
அரசியலமைப்பின் பிரிவு 280 (3) (a) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 15வது நிதிக் குழுவின் முக்கிய பணிகளில் ஒன்று, வரிகளின் நிகர வருவாயை யூனியன் மற்றும் மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்காக பரிந்துரைகளை வழங்குவது. மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஏற்றார்போலவும், தேவைகளுக்கு ஏற்பவும் ஒவ்வொரு மாநிலத்திற்கு வெவ்வேறு விகிதாசாரங்கள் அடிப்படையில் வழங்கப்படும். குறிப்பாக சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவினங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் இந்த நிதி மாநில அரசுகளுக்கு உதவும்.
பிப்ரவரி 2022-இல் ரூ.2.4 லட்சம் கோடியை வெளியிட்ட பிறகு, மார்ச் இறுதியில் ரூ.95,100 கோடியை வெளியிட்டது. அந்த வகையில் இன்றைய தினம் இரண்டு தவணை வரி பகிர்வையாக ரூபாய் 1.16 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. வழக்கமாக மாதாந்திர வரி பகிர்வாக ரூபாய் 58,332.86 கோடி மட்டுமே விடுவிக்கப்படும் சூழலில் இம்முறை இரண்டு தவணைகளை சேர்த்து 1,16,665.75 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு 4758.78 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 20,928.62 கோடி ரூபாயும், பீகாருக்கு ரூ.11,734.22, ம.பி மாநிலத்திற்கு ரூ.9158.24 விடுவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக கோவா மாநிலத்திற்கு 450.32 கோடி ரூபாயும் மத்திய நிதித்துறை அமைச்சகத்தால் வரி பகிர்வு முறையில் விடுவிக்கப்பட்டுள்ளது.