வணிகம்

கிரெடிட் கார்ட் பில் கட்ட கேஷ்பேக் கொடுக்கும் Cred நிறுவனம்... காசு பார்ப்பது எப்படி?

கிரெடிட் கார்ட் பில் கட்ட கேஷ்பேக் கொடுக்கும் Cred நிறுவனம்... காசு பார்ப்பது எப்படி?

webteam

If you didn't pay for a product, then you are the product என வணிகத்தில் ஒரு பழமொழி கூறிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த கூற்று ஃபேஸ்புக், கூகுள் போன்ற பெருநிறுவனங்களுக்கு பொருந்திப் போகும். ஆனால் இப்போது கிரெடிட் கார்டுக்கும் ஒத்துப்போகத் தொடங்கியுள்ளது.  உங்கள் கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் அது சார்ந்த தரவுகளை நீங்கள் கொடுக்க சம்மதித்தால், அதற்கு பகரமாக Cred என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனம் கேஷ்பேக், கிரெட் காயின், தள்ளுபடி கூப்பன்களைக் கொடுக்கிறது.

இந்தியாவில் கடந்த மார்ச் 2022 நிலவரப்படி மொத்தம் 7.36 கோடி கிரெடிட் கார்டுகள் இருப்பதாக ஆர்பிஐ தரவுகள் கூறுகின்றன. 2020 - 21 நிதியாண்டுக்கு (வருமான வரி மதிப்பீடு ஆண்டு 2021 - 22) கடந்த டிசம்பர் 2021 வரை 5.89 கோடி பேர் மட்டுமே வருமானவரிப் படிவத்தைத் தாக்கல் செய்துள்ளனர் என்கிறது இந்திய வருமான வரித் துறை தரவுகள். 20:80 என ஒரு பொது விதியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எந்த ஒரு வியாபாரத்திலும், 20% பொருட்கள் அல்லது சேவைகள் தான் 80% விற்பனை வருவாயைக் கொண்டு வரும். அதே போல, சுமார் 120 கோடி பேர் கொண்ட இந்தியாவில், சொகுசுப் பொருட்கள், ஆடம்பர பொருட்கள், இ எம் ஐ பர்சேஸ் வாங்குவது எல்லாம் மேலே குறிப்பிட்ட கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்பவர்களாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த நடுத்தர பணக்காரர்களை ஓரிடத்தில் திரட்டி, அவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் ஒரு ஹைஃபை வியாபாரம் தான் Cred. 

ஃப்ரீசார்ஜ் நிறுவனர் குனால் ஷா Cred நிறுவனத்தை கடந்த 2018ஆம் ஆண்டு பெங்களூரில் நிறுவினார். சிகுயா கேப்பிட்டல், டைகர் குளோபல் என பல முன்னணி வெஞ்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் பல மில்லியன் டாலரை Cred-ல் கொட்டியுள்ளனர். ஒரு ஸ்டார்ட் அப் அத்தனை எளிதில் அடைய முடியாத உயரத்தை மூன்று ஆண்டுக்குள் Cred தொட்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் மதிப்பீடு 2022ல் 6.4 பில்லியனைத் தொட்டுள்ளது.

Cred செயலியை கிரெடிட் கார்டுகளுக்கான Reward Enabled Payment App என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் 750க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருப்பவர்கள் மட்டுமே Cred செயலிக்குள் நுழையவே முடியும் என்பதால் முதலில் இவர்களில் வியாபாரம் குறித்து சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால் Cred செயலிக்குள் நுழையலாம். இல்லையெனில் கிரெடிட் ஸ்கோரை மட்டும் பார்க்க Cred செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் கிரெடிட் கார்டுகளின் விவரங்களைப் பதிவிட்டால், ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கான கடைசி தேதி, செலுத்த வேண்டிய தொகை, செய்த செலவுகள், அன்பில்ட் தொகை என எல்லா விவரங்களும் ஒரே இடத்தில் பார்க்கலாம். உங்கள் கிரெடிட் கார்டுகளுக்கான பணத்தை செலுத்தினால், உங்களுக்கு கேஷ்பேக், கிரெட் காயின்கள் எல்லாம் கிடைக்கும். கேஷ்பேக்கை ரொக்கமாக மாற்ற முடியாது, ஆனால் அதைக் கொண்டு கிரெடிட் கார்ட் பில், ரீசார்ஜ், மின்வாரியக் கட்டணம், டிடிஹெச்... போன்றவற்றைச் செலுத்தலாம்.

கிரெட் காயின்களை வைத்து, Cred தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இ-காமர்ஸ் தளத்தில்  பொருட்களையோ, சேவைகளையோ வாங்கலாம் முன்பதிவு செய்யலாம். கிரெட் காயின்களை வைத்து கேஷ்பேக் வெல்வதற்கு கூட கட்டணங்களைச் செலுத்தலாம்.

எதிர்கால திட்டங்கள்

Cred பிசினஸ்: கிரெடிட் கார்டைக் கொண்டு வியாபார செலவீனங்களைச் செலுத்துவது

Cred கேஷ்: ஒவ்வொரு நபருக்கும் அவரது திறனைப் பொறுத்து சில லட்சம் கடன் தயாராக இருக்கும். தேவையானபோது ஒரு சில நிமிடங்களில் பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். எடுத்துக் கொள்ளும் பணத்துக்கு மட்டும் வட்டி கட்டினால் போதும். மற்றபடி ப்ராசசிங் கட்டணம், முன் கூட்டியே கடனைத் திருப்பிச் செலுத்தும் கட்டணங்கள் எதுவும் கிடையாது.

Cred ஸ்டோர்: Cred உறுப்பினர்களுக்கு கிரெட் காயின்களைக் கொண்டும் சில பிரத்யேக பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் ஆன்லைன் ஸ்டோர்.

Cred மின்ட்: Cred உறுப்பினர்கள் தங்களிடம் இருக்கும் உபரியான பணத்தை (குறைந்தபட்சம் 1,00,000) 9% வரை வட்டிக்கு டெபாசிட் செய்யலாம், பணம் தேவையாக இருக்கும் மற்ற கிரெட் உறுப்பினர்களுக்கு கடன் கொடுக்கலாம்.

இப்படி பல திட்டங்கள் பரிசோதனையிலேயே இருக்கின்றன. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிரெட், பெங்களூரு நகரத்திலேயே பல திட்டங்களை இன்னும் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வரவில்லை.

இதில் எப்படி காசு பார்க்கிறது Cred?

1. லிஸ்டிங் கட்டணம்: Cred செயலிக்குள் நுழைத்த உடனேயே கீழே ஹோம், கார்ட்ஸ், பே, ரிவார்ட்ஸ், ஷாப்... என பல ஆப்ஷன்கள் இருக்கும். தலைப்புக்குள் சென்றால் குரோமா, எம் ஐ, அமேசான், மிந்த்ரா... போன்ற பல நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதற்கான ஆப்ஷன்கள் தயாராக இருக்கும். இப்படி பட்டியலிடப்படுவதற்கு கிரெட் தரப்பு, பொருட்களை விற்கும் நிறுவனங்களிடமிருந்து ஒரு கட்டணத்தை வசூலிக்கிறது.

2. ரிடம்ப்ஷன் கட்டணம்: கிரெட் காயின்களை செலவழிக்க ஸ்விக்கி, செப்டோ, கன்ட்ரி டிலைட்... போன்ற நிறுவனங்களின் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். கிரெட் காயின் மூலம் ஏதாவது பொருள் அல்லது சேவை விற்பனையானால் தனியாக கமிஷன் அல்லது கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

3. தரவுகள் பகிர்வு: இந்தியாவில் அதிகம் பணம் சம்பாதிக்கக் கூடிய மக்களின் தரவுகளை வைத்திருக்கும் கிரெட், அதை நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமும் கட்டணத்துக்கு பகிர்ந்து கொள்வதாக ஸ்டார்ட் அப் டாகி போன்ற சில வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

4. Cred கேஷ் கமிஷன்: ஒருவர் Cred செயலி மூலம் கடன் வாங்கினால், அந்தக் கடனை விற்றுக் கொடுத்ததற்கு நிதி நிறுவனங்களிடமிருந்து கிரெட் நிறுவனத்துக்கு கமிஷன் தொகையாகச் செல்கிறதாம். கடந்த 2021ஆம் ஆண்டில் 88.6 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டிய கிரெட் நிறுவனத்தின் நிகர நஷ்டம் 523 கோடி ரூபாயாக இருக்கிறது. கூடிய விரைவில் மேலே குறிப்பிட்ட புதிய திட்டங்கள் செயலுக்கு வந்து கிரெட்டின் லாபம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை நம்பித் தான் பல நிறுவனங்கள் இதுவரை சுமார் $1 பில்லியன் முதலீடு செய்திருக்கிறார்கள்.

- கெளதம்