"குஜராத் மாநிலத்தின் வணிகம், ஒரு தனி மனிதனின் அசுர வளர்ச்சியோடு தொடர்புடையதாக இருக்கிறது. அந்த தனிமனிதரின் பெயர் கெளதம் அதானி. இந்தியாவின் புதிய தலைமுறை தொழிலதிபர்களில் இவர் மிகவும் அதிரடியாக வியாபாரம் செய்யக்கூடியவராக இருக்கிறார்" என ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் செய்தியாளர் ஜேம்ஸ் கிராப்ட்ரீ ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.
அந்த அதிரடி வியாபார முறைகளால், இன்று சுமார் 112.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராகவும், உலகின் ஐந்தாவது பெரிய பில்லியனராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் கெளதம் அதானி. கொஞ்சம் கேப் கிடைத்தால் பில் கேட்ஸையே பின்னுக்குத் தள்ள வாய்ப்பு இருக்கிறது. கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரின், லாரி பேஜ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், முதலீட்டு உலகின் பிதாமகர் வாரன் பஃபெட் ஆகியோர் எல்லாம் கூட, இப்போது அதானிக்கு பிறகுதான் பில்லியனர் பட்டியலில் வருகிறார்கள்.
2013ஆம் ஆண்டில் வெறும் $2.6 பில்லியன் சொத்துபத்துக்களோடு இந்தியாவின் 15ஆவது பெரிய பணக்காரராக குஜராத்தில் சிரித்த படி வியாபாரம் செய்து கொண்டிருந்த கெளதம் அதானி, ஒருநாள் இந்தியாவின் பெரிய பில்லியனர் ஆவார் என யாரிடமாவது கூறி இருந்தால் 'சூப்பர் ஜோக்கு பா... அடுத்து' என நம்மை கலாய்த்திருப்பர். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 2.6 பில்லியனில் இருந்து 42 மடங்கு (4,219%) அதிகரித்து 112.3 பில்லியனைத் தொட்டது. அதே காலகட்டத்தில் முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு 21 பில்லியன் டாலரிலிருந்து சுமார் 3 மடங்கு (321%) மட்டுமே அதிகரித்து 88.5 பில்லியனாக இருக்கிறது. இந்த 10 ஆண்டுகளில் அதானிக்கு 42 மடங்கு வளர்ச்சி எப்படி சாத்தியமானது என்பதைப் பார்ப்பதற்கு முன், எந்த காலகட்டத்தில் அவரின் சொத்து மதிப்பு அதிகரித்திருக்கிறது என்பதைப் பார்த்துவிடுவோம்.
2013ஆம் ஆண்டில் 2.6 பில்லியனாக இருந்த கெளதமின் சொத்து மதிப்பு, 2020ஆம் ஆண்டில் 8.9 பில்லியனாக அதிகரித்தது. சுமார் 2.5 மடங்கு வளர்ச்சி. ஆனால், 2020 முதல் 2022 வரையான காலத்தில்தான் கெளதம் அதானியின் சொத்துமதிப்பு 112 பில்லியன் டாலரைத் தொட்டது. 2013 சொத்துமதிப்பிலிருந்து சுமார் 40 மடங்கு வளர்ச்சி இந்த மூன்று ஆண்டு காலத்தில்தான் சாத்தியமாகி இருக்கிறது.
ஊரே கொரோனாவில் தத்தளித்துக் கொண்டிருந்த போது, ஆக்சிஜன் சிலிண்டர்களைத் தேடி அலைந்து கொண்டிருந்த போது, கெளதம் அதானிக்கு மட்டும் பல மடங்கு சொத்து பத்துக்கள் அதிகரித்தது எப்படி..?
1. அதானி கையில் உள்ள பங்குகள் + அதன் அசுர வளர்ச்சி
முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்கிற பெயரில் மட்டுமே, ரிலையன்ஸ் ரீடெயில், ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ஜுவல்லரி, ரிலையன்ஸ் பெட்ரோலியம், நெட்வொர்க் 18, மும்பை இந்தியன்ஸ்... என அனைத்து துணை நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். ஆனால் அதானி குழுமத்தில், 7 வியாபாரங்கள் தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன. பங்குச் சந்தை மூலம் அதானியின் நிறுவனங்களுக்கான மதிப்பு முழுமையாக வெளிப்படுகிறது. அது கெளதம் அதானியின் சொத்துமதிப்பிலும் எதிரொலிக்கிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 49.15 சதவீதப் பங்குகளை அம்பானியும் அவரது குடும்பத்தினருமே வைத்திருப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதானி குழுமத்தின் 7 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சுமார் 24 சதவீதம் முதல் 57 சதவீதம் வரை ஒவ்வொரு நிறுவனத்திலும் அதிக அளவிலான பங்குகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் அதானி.
உதாரணத்துக்கு, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் 24.5 சதவீத பங்குகளை தன் குடும்பத்தின் பெயரிலும், 30.3 சதவீத பங்குகளை அதானி டிரேடிங் சர்வீசஸ் என்கிற பெயரிலும் அதானியே வைத்திருக்கிறார். இப்படி அதிகப்படியான பங்குகளை வைத்திருப்பது + பங்குகளின் மதிப்பு அதிகரிப்பால், தன்னிச்சையாக அதானி அம்பானியை முந்திவிட்டார்.
அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதானியோ, அம்பானியோ நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தினால்தானே பங்குவிலை நிலைக்கும், சொத்து பெருகும்..?
2. Taller, Larger, Bigger
அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷன் எகனாமிக் சோன்ஸ் : இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 1,250 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கு கையாளப்படுகிறது. கடந்த 2021 - 22 நிதியாண்டில், அதானி போர்ட்ஸ் மட்டும் சுமார் 312 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது போக, இந்தியாவின் முக்கியமான 15 துறைமுகங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது அதானி குழுமம். இதில் தமிழகத்தின் காட்டுப்பள்ளி துறைமுகம் & என்னூர் டெர்மினலும் அடக்கம். இன்னும் சில பல துறைமுகங்களையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேலை பார்த்து வருகிறது அதானி. இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக நிர்வாக நிறுவனம் இது.
அதானி ஏர்போர்ட்ஸ்: கடந்த அக்டோபர் 2021 நிலவரப்படி டெல்லி, மும்பை, அகமதாபாத், ஜெய்பூர், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய எட்டு விமான நிலையங்கள் Public Private Partnership (PPP) முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதில் டெல்லி நீங்களாக மற்ற 7 விமான நிலையங்களும் அதானியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய விமானநிலைய நிர்வாக நிறுவனமிது.
அதானி பவர்: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் அனல்மின் நிலையம் வைத்திருக்கும் நிறுவனமிது. 14,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன்கொண்டது.
அதானி டிரான்ஸ்மிஷன்: இந்தியாவில் 18,795 சர்கியூட் கிலோமீட்டருக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் அளவுக்கு வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ள நிறுவனம். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மின்பகிர்மான நிறுவனமிது.
அதானி கிரீன் எனர்ஜி: இந்தியாவின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிறுவனம். ஏற்கனவே 5,400 மெகாவாட் மின்சார திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் 14,600 மெகாவாட் திட்டங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
அதானி டோட்டல் கேஸ்: இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு விநியோகம் நிறுவனம். இந்தியாவில் 33 இடங்களில் எரிவாயுவை விநியோகிக்க அனுமதி பெற்றுள்ளது.
அதான் வில்மர் : ஃபார்ட்ச்யூன் சமையல் எண்ணெய் பிராண்ட் அதானி வில்மருடையதுதான். இந்த எண்ணெய் இந்தியாவின் எஃப் எம் சி ஜி சந்தையில் சுமார் 19 சதவீதத்தை தன் வசம் வைத்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ்: இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளர். அதோடு இந்தியாவின் மிகப்பெரிய கனிம வள, தாதுப் பொருட்கள் வர்த்தக நிறுவனம் இது. இப்படி அதானி எந்த வியாபாரத்தை கையில் எடுத்தாலும் அதில் தன் தடத்தை மிக அழுத்தமாகப் பதித்துள்ளது.
என்னதான் பெரிய அதிபுத்திசாலியாக இருந்தாலும், இத்தனை பெரிய இடத்தை அடைய 3 ஆண்டு காலம் போதாதே..? பிறகு எப்படி அதானியால் இத்தனை வேகமாக தன் வியாபாரத்தை வளர்த்து சொத்து சேர்க்க முடிந்தது?
எளிய மொழியில் விடை வேண்டுமானால் அரசியல் நட்பு. பொருளாதார பதத்தில் விடை வேண்டுமானால் Crony Capitalism. அரசு நிர்வாகத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் அல்லது உயர் அதிகாரிகள், ஒரு சில நிறுவனத் தலைவர்கள் & தொழிலதிபர்களோடு இணைந்து வணிக உரிமங்களை தங்களுக்கு சாதகமாகக் கொடுத்துக் கொள்வதை க்ரோனி கேப்பிட்டலிசம் எனலாம். இது அதானிக்கு பொருந்திப் போவதாக ஜேம்ஸ் க்ராப்ட்ரீ 'பில்லியனர் ராஜ்' என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். "இந்தியாவின் புதிய பில்லியனர்களில் ஒருவரான கெளதம் அதானி, அப்போது குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடியுடன் நெருக்கமான நட்பில் இருந்தார்." "2001ல் நரேந்திர மோடி குஜராத் முதல்வரான பிறகுதான், கெளதம் அதானியின் தொழிலும் வியாபாரமும் உயரே பறக்கத் தொடங்கின" என பில்லியனர் ராஜ் புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடுகிறார் ஜேம்ஸ் கிராப்ட்ரீ.
அதானியின் விமானத்தில் பிரசாரம்
2014ஆம் ஆண்டு, இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக சுமார் 150 பிரசார கூட்டங்களில் மோதி கலந்து கொண்டதாகவும், கிட்டத்தட்ட 2.4 லட்சம் கிலோமீட்டர் பயணித்ததாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி ஒன்றில் குறிப்பிடுகிறது. அப்பிரசார கூட்டங்களுக்கு, அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கர்னாவதி ஏவியேஷன் என்கிற நிறுவனத்துக்குச் சொந்தமான EMB-135BJ Embraer விமானத்தில் பயணித்தார் என்றும், இந்நிறுவனம் அதானி குழுமத்தினுடையது என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் செய்தி வெளியானது.
நிலக்கரி சுரங்க ஒப்பந்தம்:
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு, இந்திய பிரதமர் என்கிற முறையில் பிரிஸ்பன் நகரத்தில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அவரோடு கெளதம் அதானியும் ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலியாவின் க்ரேட் பேரியர் ரீஃப் பகுதியில் கெளதம் அதானியின் நிலக்கரி சுரங்கத்துக்கு இந்தியாவின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1 பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாக அறிவித்தது. அதையும் ஜி20 பயணத்தின் போதே அறிவித்தார் கெளதம் அதானி. அதன் நீட்சியாகத்தான், 2019ஆம் ஆண்டில் விமான நிலைய நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிக்குள் வந்த அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு, அடுத்த இரு ஆண்டுகளில் மும்பை உட்பட நாட்டின் 7 முக்கிய விமானநிலையங்களின் நிர்வாக, பராமரிப்பு, மேம்பாட்டுப் பணிகள் வழங்கப்பட்டன. இதே போல அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு சகட்டுமேனிக்கு பல மரபுசாரா மின்சாரத்திட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன.
சில வாரங்களுக்கு முன்பு கூட, இலங்கையில் மன்னார், பூநெரின் (Pooneryn) போன்ற பகுதிகளில் காற்றாலை மின்சாரத் திட்டங்களைச் செயல்படுத்தும் உரிமத்தை அதானி கிரீன் எனர்ஜிக்கு வழங்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியே பரிந்துரை செய்ததாக ஒரு செய்தி வெளியானது எல்லாம் க்ரோனி கேப்பிட்டலிசத்தின் உச்சம் என்றே கூறலாம். இந்த க்ரோனி கேப்பிட்டலிசம் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் இருக்கிறது. உதாரணத்துக்கு அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மாவை எடுத்துக் கொள்ளலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சீன அரசாங்கத்தின் ஆதரவோடு சூப்பர் ஸ்டார் பில்லியனராக வலம் வந்தவர், தற்போது அதே சீன அரசை எதிர்த்ததால், அரசு கெடுபிடிகளில் சிக்கித் தவிக்கிறார். எனவே இது இந்தியாவில் மட்டுமே கடைபிடிக்கப்படும் முறையல்ல.
சில தினங்களுக்கு முன், அதானி குழுமம், 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த நிறுவனம் செயல்பாட்டு வந்து, அதானியின் சொத்து மதிப்பை இன்னும் எத்தனை பில்லியன் டாலர் அதிகரிக்கப்போகிறதோ தெரியவில்லை.
- கெளதம்