உக்ரைன் போர் எதிரொலியாக வீடுகள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கக்கூடும் என கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் எதிரொலியாக இரும்பு உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது தவிர நாட்டில் தற்போது சிமென்ட் விலை , தொழிலாளர் கூலி உள்ளிட்டவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வீடுகளின் விலை 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என கட்டுமான நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஹர்ஷவர்தன் பட்டோடியா தெரிவித்துள்ளார்.
ஆடம்பர வசதிகளுடன் கட்டப்படும் விலை சதுர அடிக்கு 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையும், சாதாரண வீடுகளின் விலை சதுர அடிக்கு 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையும் உயரும் என கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வீடுகள் விலை ஏற்கனவே ஓராண்டில் 10 சதவிகிதம் வரை அதிகரித்துள்ள நிலையில் மேலும் அதிகரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியபின்பு கச்சா எண்ணெய் விலை மற்றும் அதனை சார்ந்துள்ள அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் பொருளாதார நிசசயமற்ற தன்மை காரணமாக பல்வேறு கட்டுமான பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.