வணிகம்

ஹெச்.டி.எப்.சி வங்கியில் இ.எம்.ஐ கட்டுபவரா நீங்கள்..?: இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!

webteam

கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கி தரப்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதில் “ ரெப்போ விகிதம் 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகவும் , ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமல்லாமல் எல்லா வகையான கடன்களின் தவணைகளுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும், இதன் மூலம் வங்கிகளில் 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ  கட்டுவதை தள்ளி வைத்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த சலுகைகளை தனியார் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது.


இதில் ஹெச்.டி.எப்.சி வங்கி தங்களது வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகளை பெற சில விதிமுறைகளை விதித்துள்ளன. அவை பின்வருமாறு:-

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகள் மார்ச் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைபடுத்தப்படுகிறது. ஆகவே கடன் தள்ளிவைப்பு சலுகையை பெற விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தச் சலுகை பிரதமரின் கிஸான் திட்டத்திற்கு கீழ் வழங்கப்பட்ட அனைத்து விவசாய கடன்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் சிறு கடன் தொகைகளுக்கும் பொருந்தும். இது மட்டுமல்லாமல் சிறு குறு நிறுவனங்கள் பெற்ற கடன் தொகைகளுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும்.

வாடிக்கையாளர்கள் செலுத்தும் இ.எம்.ஐ. விஷயத்தில் பார்த்தோம் என்றால், அவர்கள் வாங்கிய கடன் தொகைக்கான இ.எம்.ஐ-யை அவர்கள் மூன்று மாதங்கள் வரை அதாவது மே 31-ஆம் தேதி வரை செலுத்த தேவையில்லை. ஆனால் இந்த மூன்று மாதங்களுக்கான வட்டி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகையின் படி, கடன் தொகையை பொருத்து கணக்கிடப்படும்.

ஒருவேளை வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சலுகை வேண்டாம் என்றால், அவர்கள் கணக்கில் வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்காது. ஒருவேளை இந்த மூன்று மாதத்தில் வாடிக்கையாளர் ஒருவர் இ.எம்.ஐயைக் கட்டத் தவறினால், அவர் சலுகையை பெற விரும்புகிறார் எனக் கருதப்படும்.

வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகையை பெற விரும்பினால் 022-50042333, 022-50042211 என்ற எண்களுக்கு போன் செய்து சலுகை சம்பந்தமான விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். அல்லது https://apply.hdfcbank.com/vivid/afp?product=mo- என்ற லிங்கை பயன்படுத்தியும் விண்ணப்பிக்கலாம். 

ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களை வைத்திருப்பவர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும். ஒவ்வொரு கடன் தொகைக்கும் தனித்தனியாக இந்தக் கால இடைவெளி எடுத்துக் கொள்ளப்படும்.

கிரெடிட் கார்டு பயன்படுத்தி கடன் தொகை பெற்றவர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும். ஹெச்.டி.எப்.சி வாடிக்கையாளர்களாக இருக்கும் பட்சத்தில் அவர் குறைந்த அளவிலான தொகையைச் செலுத்த வேண்டும் அல்லது இந்த மூன்று மாதத்திற்கான வட்டியானது மே 31 ஆம் தேதி வசூலிக்கப்படும்.

கிரெடிட் கார்டு பயனாளர்கள் தானாக முன் வந்து நிலுவை தொகையை ஒத்தி வைக்கலாம். மேலும் ஆன்லைன் மூலம், தானாக பணத்தை செலுத்தும் பொத்தானை இந்த காலக்கட்டத்தில் அணைத்து வைக்க வேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளது.