வணிகம்

டிவி சீரிஸ் படப்பிடிப்புத் தளமாக மாறிய குஜராத், கோவா ரிசார்ட்டுகள்!

டிவி சீரிஸ் படப்பிடிப்புத் தளமாக மாறிய குஜராத், கோவா ரிசார்ட்டுகள்!

நிவேதா ஜெகராஜா

ஊரடங்கு மற்றும் பொதுமுடக்கத்தின் எதிரொலியாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பெரும்பாலான படப்பிடிப்புகள் மாநிலத்துக்கு வெளியே ரிசார்ட்களில் நடக்கின்றன. தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோகளுக்கான படப்பிடிப்புகளும் மே மாதம் முழுவதும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா அரசு தொலைக்காட்சி, சினிமா மற்றும் வெப்சீரிஸ் உள்ளிட்டவற்றுக்கான படப்பிடிப்புகளுக்கு தடை விதித்திருக்கிறது. இந்த நிலையில், தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்புகளுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதேசமயத்தில் குஜாரத், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் ரிசார்ட்களில் சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை.

சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை என்பதால், மகாராஷ்டிராவில் படப்பிடிப்பு நடத்துவதைவிட  மாநிலத்துக்கு வெளியே உள்ள ரிசார்ட்டில்  குறைவான செலவில் படப்பிடிப்பு நடத்தமுடியும் என நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

தங்கும் இடம், உணவு, ஷூட்டிங் நடத்துவதற்கு என பிரத்யேக கட்டணம் இல்லாதது போன்ற காரணங்களால் மொத்த செலவு குறைவாகவே இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்கள்.

மொத்தமாக அறைகளை வாடகைக்கு எடுப்பதால் மிக குறைந்த கட்டணத்தில் ரூம்கள் கிடைக்கின்றன. மும்பையை விட 30 சதவீதம் குறைந்த செலவில் ஷூட்டிங் நடத்த முடிகிறது என தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் ஜூன் மாதத்தில் இருந்து படப்பிடிப்புக்கு தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ஜூன் மாதத்திலும் மாநிலத்துக்கு வெளியே ஷூட்டிங் நடக்கும் என்றே தெரிகிறது. ஒருவேளை மும்பையில் கொரோனாவின் மூன்றாம் அலையின் தாக்கம் இருந்தாலும் ஷூட்டிங் தடைபடாமல் இதுபோல மாநிலத்துக்கு வெளியே நடக்கும் என இந்த துறையை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.