வணிகம்

தொடர்ந்து அதிகரிக்கும் ஜிஎஸ்டி வசூல்: மே மாத ஜிஎஸ்டி வசூல் 1.4 லட்சம் கோடியை கடந்தது

தொடர்ந்து அதிகரிக்கும் ஜிஎஸ்டி வசூல்: மே மாத ஜிஎஸ்டி வசூல் 1.4 லட்சம் கோடியை கடந்தது

webteam

தொடர்ந்து மூன்றாவது மாதமாக 1.4 லட்சம் கோடி வசூலை கடந்து, சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி மொத்த வருவாய் மே 2022-ல் ரூ.1,40,885 கோடி வசூலாகியுள்ளது.

இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.25,036 கோடியும், மாநில ஜிஎஸ்டி-யாக ரூ.32,001 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யாக ரூ.73,345 கோடியும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ.37,469 கோடி உட்பட) செஸ் வரியாக 10,502 கோடியும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ.931 கோடி உட்பட) வசூலாகியுள்ளது.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ.27,924 கோடியும், மாநில ஜிஎஸ்டி-க்கு ரூ.23,123 கோடியையும் அரசு வழங்கியுள்ளது. இதற்கு பிறகு மே மாதத்தில் மத்திய அரசுக்கான மொத்த வருவாயாக ரூ.52,960 கோடியும், மாநில ஜிஎஸ்டி-க்கு ரூ.55,124 கோடியும் கிடைத்துள்ளது.

இது தவிர ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 31.05.2022 நிலவரப்படி ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மே 2022-ல் ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்ததைவிட 44 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மே 2021-ல் ரூ.5,592 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் மே 2022–ல் 41% அதிகரித்து ரூ.7,910 கோடி வசூலாகியுள்ளது. புதுச்சேரியில், மே 2021-ல் 123 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், மே 2022-ல் 47% அதிகரித்து ரூ.181 கோடி வசூலாகியுள்ளது.

ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நான்காவது முறையாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டு, ஜிஎஸ்டி வரி வருவாய் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

-கணபதி