வணிகம்

கொரோனா பேரிடர் எதிரொலி: குறிப்பிட்ட வரி தாக்கல்களுக்கான கால அளவு நீட்டிப்பு

நிவேதா ஜெகராஜா

தீவிர கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள சவாலான நிலைமையின் எதிரொலியாக வரி செலுத்துவோர், வரி ஆலோசகர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள இதர பங்குதாரர்களின் கோரிக்கைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட தாக்கல்களுக்கான கால அளவை அரசு இன்று நீட்டித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருமான வரி சட்டம் 1961-ன் 119-வது பிரிவின் கீழ், மத்திய நேரடி வரிகள் வாரியம் கீழ்கண்ட சலுகைகளை வரி செலுத்துவோருக்கு வழங்கியுள்ளது.

வருமான வரி சட்டம் 1961-ன் 20-வது பத்தியின் கீழ் (மேல்முறையீட்டு) ஆணையருக்கு செய்ய வேண்டிய மேல்முறையீடுகளுக்கான கடைசி தேதி 2021 ஏப்ரல் 1-லிருந்து 2021 மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி சட்டம் 1961-ன் 144-வது சி பிரிவின் கீழ், சிக்கல் தீர்வு குழுவிடம் சமர்பிக்க வேண்டிய ஆட்சேபணைகளுக்கு கடைசி தேதி 2021 ஏப்ரல் 1-லிருந்து 2021 மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி சட்டம் 1961-ன் 148-வது பிரிவின் கீழ், நோட்டீஸ் பெற்றதற்கு பின்னர் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 ஏப்ரல் 1-லிருந்து 2021 மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி சட்டம் 1961-ன் 139-வது பிரிவின் துணைப் பிரிவு 4 மற்றும் துணைப் பிரிவு 5 கீழ் வரி விவரங்களை தாமதமாக தாக்கல் செய்தல் மற்றும் திருத்திய விவரங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 மார்ச் 31-லிருந்து 2021 மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி சட்டம் 1961-ன் 194-IA, 194-IB மற்றும் 194M ஆகியவற்றின் கீழ் தள்ளுபடி செய்யப்பட்ட வரியை செலுத்துவதற்கான கடைசி தேதி 2021 ஏப்ரல் 1-லிருந்து 2021 மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

படிவம் 60-ல் தரப்பட்ட விளக்கங்கள் குறித்த விவரங்களைக் கொண்ட  படிவம் 61-ஐ தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 ஏப்ரல் 1-லிருந்து 2021 மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை எண் 8/2021 in F. No. 225/49/2021/ITA-II வெளியிடப்பட்டுள்ளது. www.incometaxindia.gov.in எனும் முகவரியில் இதைக் காணலாம்.