இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்திருக்கிறது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 56,520 ரூபாய்க்கு இன்று நகைக் கடைகளில் விற்பனை செய்யப்படும். வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, 101 ரூபாய்க்கு விற்கப்படும்.
இரண்டு நாள்களில் தங்கத்தின் விலையில் கிட்டத்தட்ட 1000 ரூபாய் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கான முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது அமெரிக்க அதிபர் பைடனின் பேச்சுதான்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான போரை பின்னல் இருந்து இயக்குவது அமெரிக்காதான். ரஷ்யாவின் உட்பகுதிகளை உக்ரைன் தாக்குவதற்கு, LONG RANGE மிஸைல் தேவை. உக்ரைன் அவற்றை பயன்படுத்தலாம் என அமெரிக்கா அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பிரேசிலில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், பைடன் உலகத் தலைவர்களிடம், தனது நிர்வாகம் "உக்ரைனின் இறையாண்மை மற்றும் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டை வலுவாக ஆதரிக்கிறது" என்று தெரிவித்தார். இதன்மூலம் இந்த மிஸைல் அனுமதி குறித்த தகவல் உண்மைதான் என்பது உறுதியாகிறது. ஒருவேளை உக்ரைன் லாங் ரேஞ்ச் மிஸைல்களை பயன்படுத்தினால், தக்க பதிலடி இருக்கும் என உறுதியளித்திருக்கிறது ரஷ்யா.
ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் மரியா புட்டினா, "உலகை மிகவும் ஆபத்தான RED LINE நோக்கி அமெரிக்கா தள்ளிக் கொண்டிருக்கிறது" என காட்டமாக விமர்சித்திருக்கிறார். போர்ச் சூழல் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்து இருப்பதால் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,608.88 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. விரைவில் மீண்டும் 2700 என்னும் பழைய நிலைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
அதே சமயம், புதிய உச்சத்தை தொட, இன்னும் சில மாதங்கள் ஆகும் எனவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து இருக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.