Gold Dalle3
தங்கம்

தங்கம் விலை இன்னும் குறையுமா?

த. பிரபாகரன்

உயர்வும் தாழ்வும்:

விலை உயர்வு: சென்ற மாதம், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $2,450க்கு அருகில் உயர்ந்தது. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர், தங்கம் தடுக்க முடியாததாகத் தோன்றியது. தங்கநகை வாங்க நினைத்தவர்கள் கவலை கொண்டனர்.


விலை குறைவு: இந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை சிறிது இழந்து,தற்போது அவுன்ஸ் ஒன்றுக்கு $2,310 ஆக உள்ளது. இடையில் என்ன நடந்தது?

ஏன் விலை குறைகிறது? 

காரணம் 1:  வட்டி விகிதங்கள்: இந்த ஆண்டு அமெரிக்க பெடரல் வங்கி மூன்று முறை வட்டி விகிதத்தை குறைக்கும் என்று ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்த்த நிலையில், வலுவான பணவீக்கத்தால் மெல்ல மெல்ல அது குறைந்து நேற்று நடந்த கூட்டத்தில் இந்த ஆண்டு இறுதியில் ஒரு முறையும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 2-3 மூன்று முறை மட்டுமே வட்டி விகித குறைப்பு நடவடிக்கை இருக்கும் என தெரிவித்தது. இதனால் வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்வாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். 

காரணம் 2. வலுவான அமெரிக்க டாலர்: வட்டி விகித குறைப்பு தாமதத்தினாலும், அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை வலுவாக இருந்ததும், டாலர் குறியீட்டு எண்ணை உயர்த்தியது, தங்கத்தின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

காரணம் 3. சீனாவின் இடைநிறுத்தம்: மேலே கூறிய இரண்டு காரணங்களை விடவும், தொடர்ந்து 18 மாதங்கள் தங்கத்தை அதிக அளவில் வாங்கிய சீனா சென்ற மாதம் வாங்குவதை நிறுத்தியது, தங்கத்தின் விலை குறைய காரணமாக இருந்தது.    

இந்தியாவில் தங்கத்தின் விலை:

அமெரிக்க டாலர் குறியீட்டு எண் வலுவாக உள்ளதால், இந்திய ரூபாய் உள்ளிட்ட வளரும் நாடுகளின் ரூபாய் மதிப்பு குறையும். கடந்த சில நாட்களாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதை கவனிக்கலாம். இது இந்தியாவில் தங்கத்தின் விலையை வெகுவாக குறைய விடாமல் வைத்துள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் 5% வரை விலை குறைந்து உள்ள நிலையில், இந்திய சந்தையில் 3.5% வரையே குறைந்து உள்ளது. 

தங்கத்தின் விலையில் முக்கிய லெவெல்கள்:  

தங்க சந்தையை தீவிரமாக கண்காணித்து வருபவர்களுக்கு, முக்கிய நிலைகளை கவனிக்க வேண்டியது அவசியம். MCX இல், தங்கம் 10 கிராம் அளவில் ₹70,800 விலையில் சப்போர்ட் எடுக்கலாம். அதே சமயம்   ₹72,000 என்ற resistance ஐ எதிர்கொள்ளலாம். சர்வதேச சந்தையில், ஸ்பாட் தங்கம் $2,300 அளவில் உடனடி சப்போர்ட் எடுக்கலாம், முக்கிய சப்போர்ட் அவுன்ஸ் ஒன்றுக்கு $2,280. அதிகப் பக்கத்தில், ஸ்பாட் கோல்ட் உடனடி resistance-ஆக $2,330 ஆகவும், முக்கியமான resistance-ஆக $2,350 ஆகவும் உள்ளது. இந்த நிலைகளை அறிந்திருப்பது, தங்க சந்தையில் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவலாம். 

அடுத்தது என்ன?

தங்க விலையின் எதிர்காலம் குறித்து எல்லோரும் ஒரே கருத்தில் இல்லை. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் விலை குறைய வாய்ப்புகள் இருப்பதாகவும், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கத் தொடங்கும் போது, இந்த ஆண்டு இறுதியில் தங்க விலை மீண்டும் உயரும் என்று Ing think நிறுவனத்தின் அனலிஸ்டுகள் கருதுகின்றனர். 

ஆனால்  இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை உள்ளிட்ட புவிசார் பிரச்சினைகள், வட்டி விகிதம் குறைப்பு நடவடிக்கைகள் முதலான அனைத்து  காரணிகளும் இதுவரை உயர்ந்த தங்கம் விலையில் எதிரொலித்து விட்டது. நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது பெரிய அளவில் விலை உயர வாய்ப்பில்லை எனவும், அடுத்த ஆண்டு விலை குறையவே வாய்ப்புகள் இருப்பதாகவும் Julius Baer நிறுவனம் கணிக்கிறது. 

மேலே கூறிய அனைத்து காரணிகளையும் பார்க்கும் போது அடுத்த சில மாதங்கள் தங்கம் விலை சிறிது குறையவும், ஆண்டு இறுதியில்,  மீண்டும் விலை அதிகரித்து அடுத்த ஆண்டு இறுதியில் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது.

முக்கிய குறிப்பு: மேலே உள்ள பார்வைகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள், வல்லுநர்கள் மற்றும் தரகு நிறுவனங்களின் கருத்துகளே தவிர, புதிய தலைமுறையின் கருத்து அல்ல. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன், சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் சரிபார்க்குமாறு முதலீட்டாளர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.