வணிகம்

பொங்கல் பண்டிகையையொட்டி அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை

நிவேதா ஜெகராஜா
பொங்கல் தினத்தையொட்டி அய்யலூர் ஆட்டுச் சந்தையில் 2 கோடிக்கு மேல் ஆடு மற்றும் கோழிகள் விற்பனையாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையும் நடைபெறும். அதில் வேடசந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியான வடமதுரை, எரியோடு, குஜிலியம்பாறை போன்ற பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல், கரூர், திருச்சி போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் கோழிகள் என ஆயிரக்கணக்கான கால்நடைகளை  கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதுண்டு. இந்நிலையில் இந்த வாரமும் அந்தச் சந்தை நடந்தது. இந்த வாரம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சந்தை நடைபெற்றது.
சிறப்பு சந்தையென்பதால், 5,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தது. அதேபோல ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளும் விற்பனைக்கு வந்தது. ஒவ்வொன்றும் நூறுகளில் தொடங்கி ஆயிரங்களில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், சந்தை முடிவில் சுமார் 2 கோடிக்கு மேல் ஆடுகளும் கோழிகளும் வர்த்தகம் ஆகியுள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு விதி முறைகள் நடைமுறையில் உள்ளதால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை மந்தமாகவே நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 
இன்றைய வியாபாரத்தில் எட்டு கிலோ மதிப்புள்ள ஆடு ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை விற்பனையானது. நாட்டுக்கோழி கிலோ ரூ.350 முதல் ரூ.450 வரையும், சண்டை சேவல்கள் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை விற்பனையானது. நாட்டு சேவல்கள் 1000 முதல் 2000 வரை விற்கப்பட்டது.