வணிகம்

சர்வதேச அளவில் குறைந்த ஒயின் உற்பத்தி! வரலாறு காணாத சரிவு? - அதிர்ச்சி கொடுக்கும் காரணம்!

சர்வதேச அளவில் குறைந்த ஒயின் உற்பத்தி! வரலாறு காணாத சரிவு? - அதிர்ச்சி கொடுக்கும் காரணம்!

EllusamyKarthik

சர்வதேச அளவில் வரலாறு காணாத வகையில் மது வகையான ஒயின் உற்பத்தி சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஐரோப்பாவை சேர்ந்த வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு அடிப்படை காரணமாக ஐரோப்பிய கண்டத்தில் நிலவும் மோசமான வானிலை என சொல்லப்பட்டுள்ளது. 

ஒயின் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான இடங்களில் வானிலை வழக்கத்திற்கு மாறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் உறைபனி நிலவுவதும் உற்பத்தி சரிய காரணம் என தெரிவித்துள்ளது பாரிஸ் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள வைன் மற்றும் ஒயின் சர்வதேச அமைப்பு (OIV). 

2021-இல் இதுவரையில் 250 மில்லியன் ஹெக்டோ லிட்டர் மட்டுமே ஒயின் உலகளவில் உற்பத்தியாகி உள்ளதாம். (ஹெக்டோ லிட்டர் = 100 லிட்டருக்கு சமம்)

கடந்த 2020 உடன் ஒப்பிடும் போது மொத்த உற்பத்தியில் 4 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும். கடந்த 20 ஆண்டுகள் சராசரி ஆண்டு உற்பத்தியில் 7 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் தான் உலகளவில் 45 சதிவிகித ஒயின் உற்பத்தி செய்யப்படுகிறதாம். ஒயின் உற்பத்தியின் முன்னணி நாடுகளும் இது தான். இந்நிலையில், பிரான்சில் 27 சதவிகிதம், ஸ்பெயினில் 14 சதவிகிதம், இத்தாலியில் 9 சதவிகிதம் என்ற அளவில் கடந்த ஆண்டை காட்டிலும் உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளதாம்.  

இருந்தாலும் இதில் ஒரே ஆறுதலாக ஐரோப்பிய கண்டத்தில் மற்றொரு நாடான ஜெர்மனியின் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 4 சதவிகிதம் உற்பத்தி கூடி உள்ளதாம். 

இதற்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றாலும் பருவநிலை மாற்றத்தை கணக்கில் கொண்டு ஒயின் உற்பத்தியாளர்கள் புதிய நுட்பங்களை பின்பற்ற வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

மறுபக்கம் தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா மாதிரியான நாடுகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 19 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம். இருந்தாலும் இதனால் உலக அளவிலான ஒயின் உற்பத்தி நிலை சராசரிக்கு திரும்ப ஐரோப்பிய கண்டத்தில் உற்பத்தி வழக்கமான நிலைக்கு திரும்ப வேண்டும் எனவும் OIV தெரிவித்துள்ளது.