வணிகம்

நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாகக் குறையும்..!

webteam

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி விகிதம் நடப்பு நிதி ஆண்டில் 7.1 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள மதிப்பீடு படி, கடந்த நிதியாண்டில் (2015-16) 7.6 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் விளைவுகள், பொருளாதார வளர்ச்சி விகித மதிப்பீட்டில் சேர்க்கப்படவில்லை. இந்த தகவல்களை, டெல்லி தலைமை புள்ளியியலாளர் டி.சி.ஏ. அனந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

மொத்த மதிப்புக் கூட்டல் (ஜிவிஏ) வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருந்தது.

அதேசமயத்தில், வேளாண் துறை, மீன் பிடிப்புத் துறை, வனத் துறை ஆகியவற்றின் வளர்ச்சி 1.2 சதவீதத்தில் இருந்து 4.1 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் சுரங்கத் துறையின் வளர்ச்சி 1.8 சதவீதம் குறையும் எனவும், உற்பத்தித் துறையின் வளர்ச்சி 9.3 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாகக் குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.