வணிகம்

ஃபோர்டு ஆலையை பயன்படுத்தி 2 லட்சம் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி : டாடா மோட்டார்ஸ்

ஃபோர்டு ஆலையை பயன்படுத்தி 2 லட்சம் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி : டாடா மோட்டார்ஸ்

webteam

ஃபோர்டு நிறுவனத்தின் ஆலையை பயன்படுத்தி 2 லட்சம் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மற்றும் குஜராத்தில் உள்ள தங்கள் ஆலைகளை மூடுவதாக ஃபோர்டு நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது.

இந்நிலையில், குஜராத்தில் உள்ள ஃபோர்டு ஆலையை டாடா மோட்டர்ஸ் நிறுவனம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. எவ்வளவு தொகைக்கு இந்த ஆலை வாங்கப்படுகிறது என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், வாங்கிய பிறகு மேலும் ரூ.2000 கோடி அளவுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதில் முதலீடு செய்ய இருப்பதாக தெரிகிறது.

இந்த ஆலையை பயன்படுத்தி, எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆலையில் இருந்து ஆண்டுக்கு 2 லட்சம் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க யுத்தியையும் வகுத்து வருகிறது டாடா மோட்டார்ஸ். மேலும், ஃபோர்டு ஆலையில் உள்ள பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கப்போவதில்லை என குஜராத் அரசிடம் டாடா மோட்டார்ஸ் உத்தரவாதம் வழங்கி இருக்கிறது. இதற்காக ஃபோர்டு நிறுவனம் ரூ.4500 கோடிக்கு முதலீடு செய்துள்ளது. இந்த ஆலையில் இருந்து 2.4 லட்சம் வாகனங்களை தயாரிக்க முடியும். தற்போது டாடா நானோவுக்கு என ஒதுக்கப்பட்ட ஆலையில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக இதனை அறிவிக்கவில்லை.

இரு சக்கர வாகன விற்பனை சரிவு

இரு சக்கர வாகனங்களுக்கு சர்வதேச அளவில் பெரிய சந்தை இந்தியாதான். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இரு சக்கர வாகன விற்பனை கடந்த நிதி ஆண்டில் சரிந்திருக்கிறது.

2020-21-ம் நிதி ஆண்டில் 1.51 கோடி இரு சக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செயய்ப்பட்டன. ஆனால், கடந்த நிதி ஆண்டில் இது 11 சதவீதம் அளவுக்கு சரிந்து 1.34 கோடி வாகனங்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கொரோனா பாதிப்பு வருவதற்கு முந்தைய நிதி ஆண்டில் (2018-19) இதுவரை இல்லாத அளவான 2.1 கோடி அளவுக்கு இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின. இந்நிலையில், கடந்த நிதி ஆண்டின் விற்பனை என்பது 2011-12-ம் நிதி ஆண்டின் விற்பனை அளவுக்கு மட்டுமே இருக்கிறது.

கடந்த நிதி ஆண்டு முழுவதுமே இரு சக்கர வாகனங்களின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது. குறிப்பாக, கிராமப்புற தேவை குறைவாக இருந்தது. மூலப்பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக வாகனங்களின் விலை அதிகமாக இருந்தது. அதேபோல, எரிபொருள் விலையும் தொடர்ந்து உயரந்து வருவதால் இரு சக்கர வாகனங்களின் தேவை குறைந்திருக்கிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் எரிபொருட்களில் 60 சதவீதத்துக்கு மேல், இரு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.