வணிகம்

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு: உர உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு: உர உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு

webteam

ஜி.எஸ்.டி வரிவிதிப்பினால், இடுபொருள் மற்றும் உரங்கள் மீது விதிக்கப்படும் வரியால் விவசாயிகளும், விவசாயத்துறை சார்ந்த உற்பத்தியாளர்களும் மிகுந்த பாதிப்படைவர் என விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உரங்களின் மீதான வரி, தற்போதைய 5 சதவிகிதத்திலிருந்து, 12 சதவிகிதமாக உயர்கிறது. இதன் மூலம் உர உற்பத்தியாளர்கள் மீது விழும் வரிச்சுமை நேரடியாக விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

உர ஆலோசனை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் ஜி.முன்னேந்தர் இதுகுறித்து குறிப்பிடும்போது, ”வருகின்ற மாதங்களில் விதைப்பதற்கு ஏதுவாக, வசதி படைத்த விவசாயிகள் குறைந்த விலை உரம் மற்றும் இடுபொருள்களை வாங்கி சேமித்து வைத்துக்கொள்வார்கள். அதனால், இவ்வரி விதிப்பால் பாதிப்படையப்போவது சிறு குறு விவசாயிகள்தான்” என  தெரிவித்துள்ளார். மேலும், பருவமழைக்கான அறிகுறிகள் தெரியும் இந்த நேரத்தில், உர விலை காரணமாக உரங்கள் வாங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய உரக் கூட்டமைப்பின் இயக்குநர் சதிஷ் சந்தர் கூறுகையில், ”அதிகரிக்கப்பட்ட வரிச் சுமையானது, விவசாயிகளையும், உர விற்பனைத் தொழிலையும் பெரிதும் பாதிக்கும். அதிக மானிய அளவைக் கொண்ட உள்ளீட்டு வரிக்கடனை (யூரியா) திரும்பப் பெறுவதற்கு எந்த வழியும் இல்லாத காரணத்தால் உள்நாட்டு உரவணிகம் பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.