வணிகம்

பிட்காயினை அடுத்து எத்திரியம்; புதிய கிரிப்டோ கரன்ஸி இந்தியாவில்!

பிட்காயினை அடுத்து எத்திரியம்; புதிய கிரிப்டோ கரன்ஸி இந்தியாவில்!

webteam

அண்மைக்காலமாக இந்தியாவில்  அதிகரித்து வரும் கிரிப்டோ கரன்ஸி முதலீட்டில், தற்போது புதிய வாய்ப்புகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே பிரபலமாக இருக்கும் 'பிட்காயின்' போல, இன்னும் பல பெயர்களில் கிரிப்டோ கரன்ஸிகள் வணிகம் தொடங்க உள்ளது.

பங்கு வணிகம் போலவே சர்வதேச அளவில் அதிக புழக்கத்தில் உள்ள இந்த கிரிப்டோ கரன்ஸி வணிகம் "ஆபத்தானது" எனவும், இதில் முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறும் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உட்பட பலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். அதையொட்டி, சந்தையில் பிட்காயின் மதிப்பு சற்று குறைந்தது. ஆனால், அதன் மீதான ஆர்வம் குறையவில்லை என்றே தெரிகிறது. இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸி வணிகம் நடக்கும் முன்னணி சந்தையான ஸிப்பே (ZebPay) கடந்த வாரத்தில் 'லைட்காயின்' என்ற மற்றொரு கிரிப்டோ கரன்ஸி விற்பனையைத் தொடங்கியது. அதோடு, எத்திரியம் என்ற பெயரிலான மற்றொரு கரன்ஸி வணிகத்தை அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்தச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச அளவில் மிக அதிக புழக்கத்தில் உள்ள பிட்காயினை (34%) அடுத்து, இரண்டாவது அதிக விற்பனை(25%)  நடப்பது எத்திரியத்தில்தான் என சொல்லப்படுகிறது. இது தவிர, ரிப்பிள், பிட்காயின் கேஷ், பிட்காயின் கோல்ட் என்ற பெயரிலும் கிரிப்டோ கரன்ஸிகள் சந்தையில் புழக்கத்தில் உள்ளன. 

ஆனால், கிரிப்டோ கரன்ஸி என்ற பெயரை மொழி பெயர்த்து, "ரகசிய பணம்" என குறிப்பிடுவது போல, இந்தப் பண வருகையும், வெளியேற்றமும், செயல்பாடும் கூட சாமானியனை மீறிய ரகசியமாகவே இருப்பதால், இவற்றிலிருந்து ஒதுக்கியிருப்பதே நல்லது என்பதுதான், நம்பகமான நிதி ஆலோசகர்களின் யோசனை.