ஐபிஎல் ஏலம் முந்தைய காலங்கள் போல டெண்டர் முறையில் நடைபெறாமல் ஏலம் முறையில் இந்த ஒளிபரப்பு உரிமத்திற்கான போட்டி நடைபெறவுள்ளதால் நிறுவனங்கள் எவ்வளவு கோடி வரை செலவழிக்க தயாராக உள்ளனர் என்ற கேள்வி பொருளாதார நிபுணர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடர் குறித்து 1996ஆம் ஆண்டு லலித் மோடி கூறியபோது, எப்படி யாருக்கும் நம்பிக்கை வரவில்லையோ, அதேபோல்தான் 10 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை 50 ஆயிரம் கோடி கொடுத்து வாங்க நிறுவனங்கள் முன் வருவார்கள் என தெரிவித்து இருந்தால் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கும்போது, 10 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தை 5,232 கோடி ரூபாய் கொடுத்து சோனி நிறுவனம் பெற்று இருந்தது. அதன்பின் கடந்த 2017ஆம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் உரிமத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் 16,347 கோடி ரூபாய் கொடுத்து ஸ்டார் மற்றும் ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் பெற்றன.
10 ஆண்டுகள் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பு செய்வதற்கே வெறும் ஐந்து ஆயிரம் கோடி மட்டுமே சோனி நிறுவனம் செலவழித்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு முந்தைய விலையை விட 158% அதிகரித்து ஏன் ஸ்டார் நிறுவனம் இவ்வளவு தொகையை வழங்கியுள்ளனர்? நிச்சயம் அந்த நிறுவனம் மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என அனைவரும் தெரிவித்த நிலையில், இந்தியாவில் வளர்ந்துவரும் இன்டர்நெட் மோகத்தாலும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்துவரும் ஐபிஎல் தொடரின் மூலமாக மட்டுமே 40 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றூ ஹாட்ஸ்டார் நிறுவனம் பல ஆயிரம் கோடி லாபத்தை ஈட்டியுள்ளனர்.
இந்த நிலையில்தான் 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான ஐபிஎல் தொடர் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் நாளை நடைபெறவுள்ளது.
4 பிரிவின் கீழ் இந்த ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் நடைபெறுகிறது.
A - இந்தியாவில் தொலைகாட்சியில் போட்டியை ஒளிபரப்பு செய்வதற்கு ( அடிப்படை விலை - 18,190 கோடி ரூபாய் )
B - இந்தியாவில் OTT தளத்தில் போட்டியை ஒளிபரப்பு செய்வதற்கு ( அடிப்படை விலை - 12,210 கோடி ரூபாய்)
C - NON - EXCLUSIVE போட்டிகளை மட்டும் OTT தளத்தில் ஒளிபரப்பு செய்ய ( 18 போட்டிகள் ) (அடிப்படை விலை- 1,440 கோடி ரூபாய் )
D - இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கு ( அடிப்படை விலை 1110 கோடி ரூபாய் )
என நான்கு பிரிவின் கீழ் ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு ஏலம் நடைபெறவுள்ளது. 4 பிரிவையும் சேர்த்து ஐபிஎல் உரிமத்திற்கான அடிப்படை விலையே 32,890 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை பெற சோனி, ரிலயன்ஸ், ஹாட்ஸ்டார், ஸ்டார், Zee, டைம்ஸ் இன்டர்நெட், சூப்பர் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். மிகவும் எதிர்பார்த்த amazon நிறுவனம் கடைசி நேரத்தில் இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை என அறிவித்ததால் பிசிசிஐ எதிர்பார்த்த அளவிற்கு ஏலத்தின் தொகை அதிகரிக்காவிட்டாலும் ஒட்டுமொத்த ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் 45 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 50 ஆயிரம் கோடி வரை விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
முந்தைய காலங்கள் போல டெண்டர் முறையில் நடைபெறாமல் ஏலம் முறையில் இந்த ஒளிபரப்பு உரிமத்திற்கான போட்டி நடைபெறவுள்ளதால் நிறுவனங்கள் எவ்வளவு கோடி வரை செலவழிக்க தயாராக உள்ளனர் என்பது பொருளாதார நிபுணர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் வளர்ச்சி அதிகரிக்கும் நிலையில் ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை பெரும் நிறுவனத்தின் பங்குகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பெரிய அளவில் அதிகரிக்கும் என்பதால் இந்த ஒளிபரப்பு உரிமத்தை பெற அனைவரும் தயாராக இருக்கின்றனர் எனத் தெரிவிக்கின்றனர்.