புதிய ஜி.எஸ்.டி வரி விகிதம் காரணமாக, மாறுபடும் வரிவிதிப்பு குறித்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பி வருகின்றன.
ஜிஎஸ்டி அடுத்த மாதம் 1-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இதில் பல்வேறு பொருட்களுக்கு வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கிரெடிட் கார்டு, வங்கி சேவைகள், காப்பீட்டு சேவைகளுடன் தொடர்புடைய சில சேவைகளுக்கு, தற்போது சேவை வரியாக 15 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.
நிதிச்சேவைகளுக்கு வரி விதிப்பு 18 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டிருப்பதை, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவலாக அனுப்பி வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், ”ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட உள்ளது. இதன் எதிரொலியாக, ஏற்கெனவே இருந்த 15 சதவிகித சேவை வரி, ஜிஎஸ்டியில் 18 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சில தனியார் வங்கிகளும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து தகவல்களை அனுப்பி வருகின்றன. டெர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம், யுலிப், ஹெல்த், கார் காப்பீடு போன்றவற்றுக்கு சேவை வரியாக 15 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இவை ஜிஎஸ்டியில் 18 சதவீதமாக உயர்கிறது.