Royalty pt web
வணிகம்

கிழக்கிந்திய நிறுவனம் போல் செயல்பட ஆரம்பிக்கிறதா இந்தியாவில் பட்டியலிடப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள்?

கிழக்கிந்திய நிறுவனம் போல் செயல்பட ஆரம்பித்து இருக்குகின்றனவா இந்தியாவில் பட்டியலிடப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள்?

த. பிரபாகரன்

கடந்த வாரம் நெஸ்லே இந்தியாவின் பங்குதாரர்கள், அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) support செய்யும் விதமாக அதன் தாய் நிறுவனத்திற்கு ராயல்டி தொகையை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, ஆண்டுக்கு 0.15% உயர்த்துவதற்கான தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

அதிக ராயல்டி தொகை செலுத்துவது இந்திய நிறுவனத்தின் லாபத்தையும், டிவிடெண்ட் வழங்கும் அளவையும் குறைக்கும். இது பங்கு விலையையும் பாதிக்கும்.

நினைத்து பாருங்கள்... ஒரு இந்திய நிறுவனம் பெரும் லாபம் ஈட்டுகிறது, ஆனால் அந்த பணத்தில் கணிசமான பகுதி வெளிநாட்டில் உள்ள அதன் தாய் நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது. காரணம், வெளிநாட்டு தாய் நிறுவனத்திற்கு ராயல்டி செலுத்துதல்.

இந்தியாவில் வளர்ந்து வரும் இந்த போக்கு குறித்து வல்லுநர்கள் இது இந்திய பங்கு முதலீட்டாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கூறுகிறார்கள்.

ராயல்டி கட்டணங்கள் என்பது ஒரு நிறுவனம், மற்றொரு நிறுவனத்தின் அறிவுசார் சொத்துரிமை (IP) ஐ, அதாவது பிராண்ட் பெயர்கள் (Brand name), தொழில்நுட்பம் (Technology) அல்லது ரகசிய செயல்முறைகள் (secret process) போன்றவற்றைப் பயன்படுத்தும் உரிமைக்காக செலுத்தும் கட்டணங்கள் ஆகும். இது வேறு யாரோ ஒருவரின் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான வாடகை போன்றது.

நெஸ்லே மற்றும் பிற MNC நிறுவனங்களின் ராயல்டி தொடர்பான தரவுகள்

இந்தியாவில், மாருதி சுசூகி மற்றும் நெஸ்லே இந்தியா போன்ற பெரிய பெயர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு தாய் நிறுவனங்களுக்கு ராயல்டி கட்டணங்களைச் செலுத்துகின்றன. கவலை என்னவென்றால் இந்த கட்டணங்கள் பெரும்பாலும் வருவாயின் (Revenue) ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டவை. அதனால்தான் இதை சிலர் அநீதி என்று வாதிடுகின்றனர்.

ஏன் என்பதைப் பார்ப்போம்:

வருவாய் எப்போதும் ஒரு நிறுவனத்தின் செலுத்தும் திறனை (ability to pay) பிரதிபலிக்காது.

இரண்டு நிறுவனங்களை கற்பனை செய்து பாருங்கள்:

1) அதிக லாப விகிதங்களைக் (Profit margin) கொண்டது (ஒவ்வொரு விற்பனைக்கும் அதிக லாபம் ஈட்டுகிறது)

2) குறைந்த லாப விகிதங்களைக் கொண்டது.

முதல் நிறுவனம் மொத்த விற்பனையில் குறைவாக ஈட்டினாலும், அவற்றின் லாப விகிதம் அதிகமாக இருப்பதால், அதிக லாபத்தைக் கொடுக்க முடியும்.

Profit margin

ஆனால், தற்போதைய முறையில், இரண்டு நிறுவனங்களும் ஒரே மாதிரியான ராயல்டி கட்டணத்தைச் செலுத்தக்கூடும், ஏனென்றால் ராயல்டி தொகையானது நிறுவனத்தின் வருமானத்தை (Revenue) ஒட்டி கணக்கிடப்படுகிறது.

இங்குதான் லாபத்தின் ஒரு பகுதியாக (செலவுகள் போக எஞ்சிய பணம்) ராயல்டி கட்டணங்களை வரையறுக்கும் கருத்து வருகிறது. முதலீட்டாளர்கள் சரியான முடிவுகளை எடுப்பதற்கு உதவும் ப்ராக்ஸி (Proxy) ஆலோசகர்கள், இது ஒரு நியாயமான முறை என்று நம்புகின்றனர்.

தங்கள் பெற்றோர் நிறுவனத்தின் பிராண்ட் பெயருக்காக சில இந்திய துணை நிறுவனங்கள் செலுத்தும் ராயல்டி கட்டணங்களுடன் ஒப்பிடும்போது, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) போன்ற நிறுவனங்கள் அதிகக் குறைவான கட்டணத்தைச் செலுத்துகின்றன என்பதைக் காட்டுகின்றனர். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு "Tata" என்ற பெயரை பயன்படுத்திக்கொள்ள 200 கோடி ரூபாயை கடந்த ஆண்டு செலுத்தியது .

இது அந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானத்தில் 0.08% மட்டுமே லாப தொகையில் 0.43% மட்டுமே. எனவே, தற்போதைய ராயல்டி செலுத்தும் முறை இந்திய நிறுவனங்களுக்கு சுமையாக இருக்கிறதா? விவாதம் தொடர்கிறது.

ஒன்று நிச்சயம்: முதலீட்டாளர்களும் பங்குதாரர்களும் ராயல்டி கட்டணங்கள் அதிகமாக கொடுத்துவிடும் சூழ்நிலை ஏற்படுவதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அதற்கு எதிராக குரல் கொடுக்கவும் ஆரம்பித்து உள்ளனர்.