வணிகம்

கொரோனா பேரிடரால் மந்தநிலையில் இருக்கிறதா ரியல் எஸ்டேட் தொழில்? - அனுபவம் பகிரும் நிறுவனர்

கொரோனா பேரிடரால் மந்தநிலையில் இருக்கிறதா ரியல் எஸ்டேட் தொழில்? - அனுபவம் பகிரும் நிறுவனர்

நிவேதா ஜெகராஜா

கொரோனா அலை சற்று குறைந்தவுடன், சொந்த வீடு வாங்குவதற்கான மக்கள் அலை அதிகமாக இருந்துவந்தது. இப்போது, கொரோனா அலை மீண்டும் தொடங்கியவுடன், விற்பனை மீண்டும் மந்தமாகியுள்ளது. இந்த நிலை சரியாகுமா? இனிவரும் காலம் விற்பனையாளர்களுக்கு எப்படி இருக்கும்? - விரிவாக, நிபுணர் விளக்கத்துடன் இங்கே தெரிந்துக்கொள்ளலாம், வாருங்கள்!

கடந்த ஆண்டு கோவிட் முதல் அலை முடியும்போது, அதிகம் பரபரப்பாக செயல்பட்ட துறை ரியல் எஸ்டேட்தான். கையிலிருக்கும் தொகையை வைத்து, வீடு வாங்கும் முடிவை பலர்  எடுத்தனர். இப்படி இந்த துறை பரபரப்பாக செயல்பட்டதாலோ என்னவோ, அந்த நேரத்தில் தமிழகத்தில் ஓவர்டைம் வேலை செய்த துறைகளில் பத்தரப்பதிவு துறை முக்கியமானதாக இருந்தது. வீடு மட்டுமல்லாமல் மனைகள், விவசாய நிலங்கள் என பல சொத்துகள் அந்த நேரத்தில் கைமாறின.

சென்னையில் எடுத்துக்கொண்டால் கூட பல கட்டுமான நிறுவனங்கள் புதுப்புது திட்டங்களை அறிவித்தன. சொல்லப்போனால் செய்திதாள், இணையம், எப் எம் ரேடியோ, தொலைகாட்சிகளுக்கு அதிக விளம்பரங்கள் கொடுத்ததே கட்டுமான நிறுவனங்கள்தான். ஆனால் தற்போது இரண்டாம் அலையால் இந்த துறையில் மீண்டும் ஒரு மந்த நிலை உருவாகி இருக்கிறது.

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் இதேபோன்றதொரு சூழல் இருக்கிறது. முக்கியமான நகரங்களில் கொரோனா பரவலின் வேகம் அதிகமாக இருக்கிறது. அதனால் மக்கள் வெளியே வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டிருக்கின்றன. அதனால் பலரும் வீடு வாங்கும் முடிவை தள்ளிவைத்திருப்பதாக தெரிகிறது.

இது குறித்து ‘பாரதி ஹோம்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் அருண் பாரதியிடம் உரையாடினோம். தற்போது தேவை குறைந்திருக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அதேபோல வீடு குறித்த மக்களின் ஆர்வம் குறையவில்லை என்றும், வீடு வாங்கும் முடிவை எடுக்க இப்போதைக்கு தற்காலிகமாக மக்கள் தயங்குகிறார்கள் என்றும் தெரிவித்தார் அவர்.

“வீட்டுக்கான தேவை எப்போதும் இருப்பதுதான். நிச்சயமற்ற சூழல் வந்ததால், வீட்டின் தேவையை உணர்ந்து பலர் வீடு வாங்கும் முடிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எடுத்தார்கள். ஆனால் தற்போது மக்கள் வெளியே வரவே பயப்படுகிறார்கள். மற்ற பொருட்கள் போல இதனை ஆன்லைனில் வாங்க முடியாது. வேலை நடக்கும் இடத்துக்கு நேரில் வந்து மாடல் ஹவுஸ் மற்றும் இடத்தை பார்க்காமல் வீடு வாங்குவது என்பது நடக்காது. அதனால் கடந்த சில வாரங்களில் முன்பதிவு மிகவும் மந்தமாக இருக்கிறது.

 ஆனால் இரண்டாம் அலை முடிந்தபிறகு மீண்டும் ஒரு தேவை உருவாகும். காரணம் வீடு வாங்குவதற்கான தேவையும் காரணமும் இருந்துக் கொண்டேதான் இருக்கின்றன. தற்போது வட்டி விகிதங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. வீட்டுக்கடன் வாங்குவதற்கு இதைவிட சரியான தருணம் கிடைக்காது என்பதால் இரண்டாம் அலை முடிந்தபிறகுதான் மீண்டும் விற்பனை இருக்கும்” என்றார் அவர்.

எனில் தற்போது கட்டுமான பணியில் மட்டுமே கவனம் செலுத்துகிறீர்களா?’ என்னும் கேள்விக்கு அதில் உள்ள சிக்கல்களை நம்மிடையே விரிவாக கூறினார்.

“இப்போதைக்கு விற்பனையில் கவனம் செலுத்த முடியாது. அதனால் கட்டுமான பணியில் கவனம் செலுத்தலாம் என்றால் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்டீல் விலை உயர்ந்திருக்கிறது. மற்ற மூலப்பொருட்களும்  விலை உயர்ந்திருக்கிறது. மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முழு உற்பத்திதிறனுடன் செயல்படவில்லை.

அதேசமயம் போதுமான நிதியும் கிடைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு கட்டுமான திட்டங்களை தொடங்கி இருக்கிறோம். அந்த திட்டத்தில் சிலர் வீடுகளை வாங்கி இருக்கிறார்கள். சிலர் வீட்டுக்கடன் வாங்கி இருக்கிறார். திட்டம் ஒவ்வொரு கட்டத்தை எட்டும்போது வங்கிகள் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் வங்கிகளில் இருந்து கிடைக்கும் நிதியும் சரியான தேதியில் கிடைப்பதில்லை. பணியாளர்கள் பற்றாக்குறை, பணியாளர்களுக்கு கொரானா என காரணம் சொல்கிறார்கள். இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் நிதி இல்லாதத்தால் வேலைகளை தொடருவதில் சிக்கல் இருக்கிறது” என்று கூறினார்.

இரண்டாம் அலை முடிவடையும் போது, மீண்டும் வீடுகளுக்கான தேவை உயரும் தொழில்துறையில் ஏற்றம் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனால் இதுபோல ஒவ்வொரு நெருக்கடி வரும்போது சிறு குறு நிறுவனங்கள் குறைந்துகொண்டே இருக்கும் என்பதுதான் சோகமான செய்தி.

இதுபற்றி அருண் பாரதி பேசும்போது, “மிகவும் சிறிய நிறுவனங்களால் உடனடியாக மீண்டு சந்தையில் போராட முடியும். அதேபோல பெரிய நிறுவனங்களுக்கு நிதி ஆதாரம் இருக்கும். ஆனால் நடுத்தர நிறுவனங்கள் இதுபோன்ற சிக்கலில் மாட்டினால், அதன் பிறகு அவர்கள் மீண்டெழுவது சிரமம். இன்னும் சில வாரங்களுக்கு பிறகுதான் உண்மை நிலவரம் தெரியவரும்” என கூறினார்.

- வாசு கார்த்தி