வணிகம்

”அந்நிய வர்த்தகங்களால் சிறு, நடுத்தர வணிகம் நசுக்கப்படுகிறது” - பாரம்பரிய வணிகத்தின் நிலை?

”அந்நிய வர்த்தகங்களால் சிறு, நடுத்தர வணிகம் நசுக்கப்படுகிறது” - பாரம்பரிய வணிகத்தின் நிலை?

webteam

அந்நிய வர்த்தக நிறுவனங்களின் நுழைவால் சிறு மற்றும் நடுத்தர வணிகம் நசுக்கப்பட்டு இந்தியாவின் பாரம்பரிய வர்த்தக கலாசாரம் தகர்க்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளாக நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக அமேசான் நிறுவனம் இந்தியாவில் இருந்து தனது மொத்த விநியோக வணிகத்தை திரும்ப பெற்றுள்ளதாக நெல்லையில் அகில இந்திய நுகர்ப்பொருள் விநியோகஸ்தர் சங்க கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் உரிமை காக்கும் மாநில மாநாடு நெல்லை கேடிசி நகரில் நடைபெற்றது. இதில் 13 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டின் தொடக்கமாக சங்கக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணா, ஆன்லைன் வர்த்தகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

முதலில் அந்நிய நேரடி முதலீடு அறிமுகப்படுத்தப்பட்டு வால்மார்க் போன்ற பெரு நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு விடுத்தது. பின்னர் அரசு சில சட்ட திருத்தங்களை செய்து கொடுத்ததன் மூலம் அந்நிய நிறுவனங்கள் விலைவாசியை கணிப்பதன் மூலம் தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியது. பிற நிறுவனங்களின் பொருட்களைவிட அந்நிய நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை குறைவான விலையில் விற்பனை செய்யத் தொடங்கியது. இதன்மூலம் இந்திய வர்த்தகம் மிகவும் மோசமான சூழலை சந்தித்து சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் விநியோக அமைப்புகளை அந்நிய நிறுவனங்கள் நசுக்கி வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பு நிறுவப்பட்ட வர்த்தக கலாசாரத்தை அந்நிய நிறுவனங்கள் வருகையால் தகர்க்கும் சூழல் உருவாகியுள்ளது. அதனால்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒன்றுபட்டு இதுபோன்ற சங்கங்கள் மூலம் போராட்டத்தை நடத்தி வருகிறது.

கடந்து 8 வருட காலமாக பல்வேறு சங்கங்கள் நடத்திய போராட்டத்தின் விளைவுதான் அமேசான் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் இருந்து தனது மொத்த விநியோக வணிகத்தை திரும்பப்பெற்றது. நியாயமற்ற மற்றும் சட்ட விரோத வியாபாரம் செய்யும் நபர்களையும் கொள்முதல் விலையை விட பொருட்களை குறைவாக விற்பனை செய்யும் நபர்களின் செயல்களை தடுத்து நிறுத்தும் விவகாரத்தில் அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை சட்டரீதியாக சந்திக்கும் முடிவை சங்கங்கள் ஒன்றிணைந்து எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தரகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வெங்கடேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”ஆன்லைன் வர்த்தகத்தால் விநியோகஸ்தர்கள், சில்லரை வியாபாரிகள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். இந்த ஆன்லைன் வர்த்தகத்தால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பாரம்பரிய வணிகம் மூலம் பொதுமக்களுக்கு தயாரிப்பு நிறுவனப் பொருட்களை முறையாக விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லரை வணிகம் மூலம் கொண்டும் செல்லும் பணியை செய்து வருகிறோம். நாங்கள் முழுமையாக ஜிஎஸ்டி வரி அரசுக்கு செலுத்தி வருகிறோம். அரசுக்கு அதிக அளவில் வரி செலுத்தும் சமுதாயம் வணிகர்கள் ஆவர்.

இப்படிப்பட்ட நிலையில் சில தயாரிப்பு நிறுவனங்கள் பொருளுக்கு இரட்டை விலையை கடைப்பிடிக்கிறது. இதனால் விநியோகஸ்தர்கள், சில்லரை வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதோடு மட்டுமல்ல; தயாரிப்பு நிறுவனங்கள் பொருட்களை கொடுக்கும் பட்சத்தில் அது காலாவதியானலும், தரம் குறைந்தாலும் திரும்பப்பெற வேண்டும் என்று உணவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ளது. ஆனால் சில தயாரிப்பு நிறுவனங்கள் அந்த பொருளை எடுக்க மறுக்கிறது. இதுபோன்ற நிறுவனங்களை மத்திய மாநில அரசு இனம் கண்டு அவர்களின் பொருளை தடை செய்யவேண்டும். இந்த நிறுவனங்களால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஜிஎஸ்டியை பொருத்தவரை பல நடைமுறை சிக்கல் உள்ளது. இதனை எளிமைப்படுத்த வேண்டும்.

அதேபோல மாநில அரசு டெஸ்ட் பர்சேஸ் அறிமுகப்படுத்தி உள்ளனர். இது வரவேற்கத்தக்கது. இருந்தபோதும் இதனை அரசு விநியோகஸ்தர்கள், சில்லரை வர்த்தர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆன்லைன் வர்தகத்தை தடைசெய்ய வேண்டும். இல்லையென்றால் போராட்டங்களை முன்னெடுப்போம். ஒரு நிறுவனம் ஆன்லைன் மூலம் நுகர்வோருக்கு விற்றுக் கொள்ளலாம் என அரசு கூறுகிறது. ஆனால் சில நிறுவனம் நேரடியாக வியாபார நிறுவனங்களுக்கு பில் எதுவும் இல்லாமல் விற்கிறது. இதுகுறித்து அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.