வணிகம்

பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?

பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?

webteam

வட சட்டியை எடுத்துக்கொள்ளவும், சிறிதளவு எண்ணெய் ஊற்றவும், உளுத்தம்பருப்பு, கடுகு போடவும், பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

கட் டூ...

எதேனும் ஒரு விவசாய பிரச்னையை எடுத்துக்கொள்ளவும். மழை குறைவு அல்லது அதிகம், போதுமான விலை கிடைக்காதது, நிலம் அபகரிப்பு என காரணம் எதாவது இருக்கலாம். ஆனால், விவசாயிக்கு கடன் இருக்கவேண்டும், விவசாயி தற்கொலைக்கு தள்ளப்படவேண்டும். கூடவே, சில மோசமான அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை சேர்த்துக்கொள்ளவும். கார்ப்பரேட்டை சேர்ந்த பலமான வில்லனை இணைக்கவும்.

எந்தக் கதைக்களமாக இருந்தாலும் மேலே உள்ள விஷயங்களை சேர்த்து மூணு பாட்டு, நாலு ஃபைட், இரண்டு காமெடியை சேர்த்தால் படம் ரெடி.

கார்ப்பரேட்கள் நல்லவர்கள், தியாகிகள் என சொல்லவில்லை. அதேசமயத்தில் 24 மணி நேர நல்லவர்கள் என இங்கு யாரும் இல்லை, தியாகிகளும் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவைக்காக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தற்போது தொழில்முனைவு உயர்ந்துவருகிறது. புதுப்புது நிறுவனங்கள் உருவாகி வருகின்றன என்பதால் கார்ப்பரேட்களைத் தாக்குவது என்பது எளிய இலக்கு மட்டுமல்லாமல், விற்பனையாகும் இலக்காகவும் மாறி இருப்பதால் சினிமாவின் பார்வை கார்ப்பரேட்களின் மீது திரும்பி இருக்கிறது.

சமூகத்தில் நிலவும் பொதுப்புத்தியை காசாக்கும் வேலை நடந்துவருகிறது என்றுதான் சொல்லவேண்டும். ஏழை நல்லவர் - பணக்காரர் கெட்டவர், அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கெட்டவர்கள் - பொதுமக்கள் நல்லவர்கள் என பொதுபுத்தியை தொடர்ந்து திணிக்கும்போது அந்த க்ளீஷே தித்திக்காமல் நமக்கு திகட்டுகிறது.

முன்பெல்லாம் படத்தில் ஒருவர் இறக்கிறார் என்றால், நம்மை அறியாமல் நம் கண்களும் சுரக்கும். ஆனால் இப்போதெல்லாம் முதல் காட்சியிலே இந்த கேரக்டர் சாகப்போகிறது நமக்கு தெரிந்துவிடுகிறது.

விவசாயத்துக்கு எதிரியாக கார்ப்பரேட்டை சித்திரிப்பவர்கள், அதற்கு மாற்று என்ன என்று சொல்ல வேண்டுமே!

உரத்தை விடுங்கள், அது நிலத்தை வீணடிக்கிறது என்று சொல்லக்கூடும். ஆனால் சொட்டு நீர் பாசனம், டிராக்டர் உள்ளிட்ட பலவும் கார்ப்பரேட்களால் உருவானதுதான். கார்ப்பரேட்கள்தான் புதுமைகளுக்கு முதலீடு செய்கிறது, கார்ப்பரேட்கள் இல்லாமல் எப்படி பெரும்பாலானவர்களுக்கு புதிய வசதிகள் சென்று சேரும். இன்னும் மாடு வைத்துக்கொண்டே விவசாயம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்களா?

சரி, கார்ப்பரேட் என்றால் என்ன?

தனிநபராக ஒரு தொழிலை செய்வதை விட நிறுவனமாக செய்யும்போது தனிநபரின் சொத்துகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். நிறுவனம் தன்னிச்சையாக செயல்படமுடியும். லாப, நஷ்டம் நிறுவனத்தை சார்ந்தது. அரசின் சலுகைகள் கிடைக்கும், பலர் வேலை செய்வதற்கு வசதியாக இருக்கும், விரிவாக்கம் செய்ய முடியும் என பல காரணங்களால் நிறுவனம் உருவாக்கப்படுகிறது. தனிநபர்களுக்கு சம்பளம் எப்படி முக்கியமோ, அதேபோல நிறுவனத்துக்கு லாபம் முக்கியம். இதில் என்ன தவறு இருக்க முடியும்?

எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் சி.எஸ்.ஆர் என்னும் திட்டம் மூலம் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சமூக நலனுக்கு செலவிட வேண்டியது கட்டாயம். ஒரு சில நிறுவனங்கள் 'ஃபார்மாலிட்டி'க்காக கணக்கு காண்பித்தாலும், பல நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளின் மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களுக்காக இந்தத் தொகையை செலவிடுகின்றன என்பதையும் மறுக்க முடியாது.

உண்மையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தலைதூக்க ஆரம்பித்த பின்னர்தான் இந்தியாவில் - குறிப்பாக நகர்புறங்களில் வேலையில்லா திண்டாட்டங்கள் வெகுவாக குறைந்தன. 'வறுமையின் நிறம் சிவப்பு' போன்ற படங்களின் தேவையும் இல்லாமல் போனது. அதேநேரத்தில், இன்னொரு பக்கம் திணிக்கப்பட்ட லைஃப்ஸ்டைல், மறைமுக அழுத்தங்களால் பெருவாரியான மக்கள் கடன் - இ.எம்.ஐ கட்டுவதற்கே வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவது உள்ளிட்ட கார்ப்பரேட் கலாசாரத்தின் பாதகங்களும் பல.

ஆக, கார்ப்பரேட்கள் தவறு செய்யவில்லையா என்றால், ஆம் செய்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்கள் தவறு செய்கிறார்கள் என்னும் பொதுக்கருத்தை உருவாக்க நினைப்பதுதான் ஆபத்தானது.

'பூமி' திரைப்படம் தந்துள்ள தாக்கம்தான் இதைப் பேசவைக்கிறது. இந்தப் படத்தில் வேறு ஒரு விஷயமும் நடந்தது. நான் மாதம் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பாதித்து வரி செலுத்துகிறேன் என சொல்கிறார்கள். இந்தியாவில் விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி கிடையாது என்பதை யாருமே கவனிக்கவில்லையா? எவ்வளவு கோடி சம்பாதித்தாலும் விவசாயிகளுக்கு வரி கிடையாது. பல நூறு ஏக்கரில் விவசாயம் செய்து பெரும் தொகை சம்பாதித்தாலும் விவசாயி போர்வையில் எத்தனையோ நபர்கள் வரி விலக்கை அனுபவிக்கிறார்கள் என்பது தெரியுமா? (விவசாயத்துக்கு வரி தேவையில்லை என்பதுதான் சரியான நிலைபாடும்).

'பூமி' படத்துக்கு மாறாக 'சூரரைப்போற்று' படத்தில் தவறான ஐடியாவுக்காக அந்தப் படம் கொண்டாடப்பட்டது. ஒரு ரூபாய்க்கு டிக்கெட் கொடுப்பதால் அனைவரும் விமானத்தில் பறக்கலாம் என்பதுதான் ஏர் டெக்கானின் ஐடியா. இதனை எப்படி கொண்டாட முடியும்? அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தள்ளுபடி வழங்கினால் போட்டியாளர்கள் நசுக்கப்படுவார்கள் என்று உணர்ச்சிவசப்படும் நாம், ஒரு ரூபாய்க்கு டிக்கெட் என்றவுடன் உற்சாகமாகி கொண்டாட தொடங்குகிறோம். இப்போது போட்டியாளர்கள் நசுக்கப்படமாட்டார்களா?

முன்பதிவு செய்யாத டிக்கெட்கள்தான் விற்கிறார்கள் என சொல்லக்கூடும். சென்னையில் இருந்து பல ஆம்னி பஸ்கள் வெளியூர்களுக்கு செல்கின்றன. இதன் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளை தவிர மற்ற நாட்களில் இதன் Occupancy விகிதம் மிகவும் குறைவு. அதற்காக மற்ற நாட்களில் ஒரு ரூபாய்க்கு டிக்கெட் வழங்குவது எப்படி சரியாகும். இதே சூழல்தான் தியேட்டர்களிலும். மற்ற நாட்களில் டிக்கெட் விலையை குறைக்க வேண்டும் என சொல்ல முடியுமா?

எனக்குத் தெரிந்த ஒரு சிறு டீக்கடைகாரர் இருக்கிறார். ஒருநாள் மாலை ஆறு மணிக்கு டீ குடிக்க சென்றபோது மீதம் இருக்கும் ஓரிரு பலகாரங்களை குப்பையில் கொட்டிக்கொண்டிருந்தார். 'குப்பையில் கொட்டுவதற்கு பதில், யாருக்காவது கொடுக்கலாமே' என கூறினேன். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் சொன்னது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. 'மீதம் இருக்கும் பலகாரங்களை இன்று கொடுத்துவிடுவேன். ஆனால், நாளை மீதமாக இருக்கும் பலகாரங்கள் நமக்கு கிடைக்கும் என சிலர் நினைத்து கடை பக்கம் வருவார்கள். ஒரு சில நாட்களுக்கு பிறகு இன்று என் கடையில் அதிக பொருட்கள் மீதமாகவேண்டும் என்று வேண்டுதலை தொடங்கிவிடுவார்கள். நல்லது செய்ய திட்டமிட்டால் அது நமக்கே வினையாக வரும். நான் நல்லது செய்ய நினைத்தால் வேறு வடிவில்தான் செய்வேனே தவிர என் தொழிலில் அல்ல' என்றார்.

ஏர் டெக்கான், தொழிலில் நல்லது செய்ய திட்டமிட்டு தோல்வியடைந்தது என்பதுதான் என் புரிதல்.

அதேபோல தொழில்முனைவு குறித்து சினிமா உருவாக்கும் மற்றொரு போலி பிம்பம் கவலை அளிக்க கூடியது. `நான் வேலை செய்றவன் கிடையாது, வேலை கொடுப்பவன்' என்னும் வசனம். இதுபோல நூறு நபர்களுக்கு வேலை கொடுப்பேன், சமூகத்துக்கு சேவை செய்வேன் என்றெல்லாம் தொழில் தொடங்கமுடியாது. ஒரு ஐடியா கிடைக்கவேண்டும், அந்த ஐடியா மூலம் பணம் கிடைக்கும். இதெல்லாம் கிடைத்தால் வேலை கொடுக்கலாம், சமூக சேவை செய்யலாம். சமூக சேவை செய்வதற்காக தொழில் தொடங்க முடியாது. பணம் இருந்தால் எல்லாமே செய்ய முடியும். ஆனால், பணம் சம்பாதிப்பதற்காக தொழில் செய்ய தொடங்குகிறேன் என இங்கு சொல்ல முடியாது. காரணம், ஏற்கெனவே சொன்னதுபோல பணக்காரர்கள் கெட்டவர்கள், பணம் சம்பாதிப்பது பாவம் என்னும் பொதுபிம்பம் கட்டமைக்கப்பட்டிருப்பதுதான்.

வரிச்சலுகையை பயன்படுத்துவதற்கும் வரி ஏய்ப்பு செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வரி ஏய்ப்பு செய்தால் கண்டிக்கலாம், வரிச்சலுகையை பயன்படுத்துவதில் தவறில்லை. அதுபோல எங்கு தவறு நடக்கிறது என்பதை கண்டிக்கலாமே தவிர ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தவறு என புகுத்துவது எப்படி சரியாகும்?

'பூமி' படத்தின் அபத்தங்களின் உச்சமாக இருந்தது கார்ப்பரேட் விவசாயம் என்று முன்வைக்கப்பட்ட தீர்வு. அப்படின்னா, இவ்ளோ நேரம் முழங்கிய கார்ப்பரேட்டுக்கு எதிரான நிலைப்பாடு என்ன ஆனது என்ற கேள்வி எழுகிறது.

விவசாயத்தில் கார்ப்பரேட் நேரடிப் பங்கு வகிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்படுவதற்கு மிக முக்கிய காரணம், வேளாண் துறை என்பது லாப நோக்கம் ஒன்றை மட்டுமே சார்ந்ததாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே. அது, உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன், உணவு உட்கொள்ளும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டது.

கார்ப்பரேட்களை கண்ணை மூடிக்கொண்டும் விமர்சிக்கும் 'பூமி', ஓடிடியிலேயே வெளியிடப்பட்டதுதான் துணிச்சலான ஒன்றாகக் கருதிக்கொள்ளலாம்.

ரவுடியிச சீசன், காமெடி சீசன், பேய் சீசன் என்பது போல தற்போது கார்ப்பரேட்களை விமர்சனம் செய்யும் சீசன்போல. 'இந்தப் படத்தில் விலங்குகள் துன்புறுத்தவில்லை' என டைட்டில் கார்டு போடுவதுபோல, 'நல்ல கார்ப்பரேட் நிறுவனங்களை நாங்கள் குறிப்பிடவில்லை' என்னும் டைட்டில் கார்டாவது இனி போட்டால் நன்றாக இருக்கும்.

விவசாயத்தைக் காக்க முற்படும் திரைத்துறையினர், முதலில் ஆர்வக்கோளாறு சினிமா படைப்பாளிகளிடமிருந்து விவசாயத்தைக் காக்க வேண்டும். அல்லது, குறைந்தபட்சம் 'மேற்குத் தொடர்ச்சி மலை' போன்ற மிகச் சில படைப்புகளில் காட்டப்பட்ட விவசாயிகள், விவசாயத்தின் ஆதாரப் பிரச்னைகளை மையப்படுத்தி, நம்பகமான திரைக்கதைகளில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து, நம் விவசாய பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதில் பங்கெடுக்கலாம் என்ற விருப்பத்தையும் முன்வைக்கும் விருப்பம் மேலிடுகிறது.

- வாசு கார்த்தி