14 மாத கொரோனா பேரிடர் காலத்திலும் டீசல் விலை லிட்டருக்கு 27 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் முடங்கும் லாரி தொழிலை காக்க, டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு டீசல் விலை இதே ஜூலை மாதம் ஒன்றாம் தேதி லிட்டருக்கு 78 ரூபாய் 31 காசுகளாக இருந்தது. இந்த ஜூலையில் ஒரு லிட்டர் டீசல், 94 ரூபாய் 48 காசுகளாக இருக்கிறது. கடந்த 14 மாதத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை 27 ரூபாய் 63 காசுகள் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டும் ஊரடங்கால் முடங்கிய நிலையில், இந்த ஆண்டும் 2ஆம் அலையால் லாரிகளின் ஓட்டம் ஸ்தம்பித்தது. அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு, சரக்குப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் லாரி உரிமையாளர்கள் பெரும்பாதிப்பை சந்தித்துவரும் சூழலில், தளர்வுகளுக்குப்பின் மீண்டெழும் நம்பிக்கையை அடியோடு சரித்துள்ளது டீசலின் விலை.
ஆண்டுதோறும் உயரும் சுங்கக்கட்டணம், காப்பீட்டு கட்டணங்கள், உதிரிப் பாகங்கள் விலை உயர்வு என லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் லாரி உரிமையாளர்கள்.
ஏற்கனவே கொரோனா முடக்கத்தால் லாரிகளுக்கு போதிய லோடுகள் இல்லாமல் பல லட்சம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது இத்தொழிலை அழிவு நிலைக்கு கொண்டுவிடும் என்று வேதனைப்படுகிறார்கள் லாரி தொழிலில் உள்ளவர்கள்.