வணிகம்

சர்வதேச விமானப் போக்குவரத்தை இந்தியா உடனே அனுமதிக்க வேண்டும்: ஐஏடிஏ

சர்வதேச விமானப் போக்குவரத்தை இந்தியா உடனே அனுமதிக்க வேண்டும்: ஐஏடிஏ

நிவேதா ஜெகராஜா

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான அனுமதியை இந்திய அரசு வழங்க வேண்டும் என ஐஏடிஏ (சர்வதேச விமான போக்குவரத்து சங்கம்) வலியுறுத்தியுள்ளது. மேலும், விமானத்தில் இருக்கைகளை முன்பதிவு செய்வதில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் டிக்கெட் கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கபட்டுள்ளது.

டிக்கெட் கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரையில், இது போட்டி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் விமான பயணிகளுக்கும் பாதகமாக உள்ளது.

ஐஏடிஏ-வில் சர்வதேச அளவில் செயல்படும் 290 விமான நிறுவனங்கள் உறுப்பினராக உள்ளன. இந்தியாவைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களும் இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளன.

இந்திய அரசு தகவல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என ஐஏடிஏவின் இயக்குநர் ஜெனரல் வில்லி வால்ஷ் தெரிவித்திருக்கிறார். மேலும், அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கும் சமயத்தில் வேகமாக நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், கட்டுப்பாடுகளை விலகும் சமயத்தில் மெதுவாகவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

"சர்வதேச பயணத்துக்கு அனுமதியை வழங்கும் நேரம் வந்துவிட்டது. பல இந்தியர்கள் இந்தியாவுக்கு வர முடியாமல் வெளிநாடுகளில் தவித்துவருகின்றனர்.

உள்நாட்டு போக்குவரத்தை எடுத்துக்கொண்டால் மொத்த இருக்கைகளில் 65 சதவீதம் அளவுக்கு நிரப்ப முடியும். ஆனால், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே பயணிகள் வருகின்றனர். 2020-21-ம் நிதி ஆண்டில் 11.5 கோடி நபர்கள் மட்டுமெ பயணம் செய்திருக்கின்றனர். 2007-08 ம் நிதி ஆண்டு நிலைமைக்கு இந்திய விமான போக்குவரத்து சரிந்துவிட்டது. கோவிட்டுக்கு முந்தைய சூழலை அடைய வேண்டிம் என்றால் 2024-ம் ஆண்டு ஆகும். ஆனால், அரசு விதிமுறைகளை தளர்த்தினால்தான் இது நடக்கும்" என்று வில்லி வால்ஷ் தெரிவித்திருக்கிறார்.